ரஷ்யாவின் கௌரவம் என கருதப்பட்ட மாஸ்கோவின் நினைவாகப் பெயரிடப்பட்ட மாஸ்க்வா கப்பலை உக்ரைன் ஏவுகணை வீசித் தாக்கியபோது, அந்த கப்பலிலிருந்த ரஷ்யப் படைவீரர் ஒருவர் திகிலடைந்து மரண பயத்தில் உதவி கோரும் ஒடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சைரன் ஒலியின் பின்னணியில் அந்த ரஷ்யப் படைவீரர் உதவி கோரி அழைப்பதைக் கேட்கும் நமக்கே பதற்றம் ஏற்படுகிறது.
மாஸ்க்வா கப்பலை ஏப்ரல் 14ஆம் திகதி உக்ரைன் படையினர் R-360 Neptune ஏவுகணையால் தாக்கியதாக தெரிவித்திருந்தார்கள். அந்த கப்பல் தாக்கப்படும் காட்சியும், ஒழிந்து போ, என உக்ரைன் வீரர் ஒருவர் உற்சாகக் குரல் எழுப்பும் காட்சியும் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.
ஆனால், உக்ரைன் அந்தக் கப்பலைத் தாக்கியதாக கூறப்படுவதை மறுத்த ரஷ்யா, புயல் காரணமாக கப்பலிலிலிருந்த வெடிப்பொருட்கள் வெடித்ததால் அந்த கப்பல் மூழ்கியது என்றே கூறிவந்தது.
அந்த கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து, புடினுடைய கருங்கடல் கப்பற்படைத் தளபதியான Admiral Igor Osipov என்பவரைக் காணவில்லை. ஆனால், அவர் அந்தக் கப்பலில் உயிரிழந்தார் என்ற செய்தியை ரஷ்யா இன்னமும் மறுத்தே வருகிறது.
இந்நிலையில், மாஸ்க்வா கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கப்பலில் இருந்த ரஷ்யப் படைவீரர் ஒருவர் மரண பயத்துடன் உதவி கோரி அழைக்கும் ஒடியோ ஒன்றை உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ளது.
அந்த ஒடியோவில், தான் மாஸ்க்வா கப்பலில் இருந்து அழைப்பதாகக் கூறும் அந்த படைவீரர், மாஸ்க்வா கப்பலில் தண்ணீர் மட்டத்துக்கு அடியில் வெடிகுண்டு தாக்கியதால் இரண்டு துளைகள் ஏற்பட்டுள்ளதாகவும், கப்பல் பக்கவாட்டில் சரிந்துகொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.
தங்களால் நகர இயலவில்லை என்றும், கப்பலில் இருப்பவர்களை மீட்க முயற்சி செய்யப்போவதாகவும் கூறும் அவரது குரலில் பதற்றம் இருப்பதை தெளிவாக உணரமுடிகிறது.
ஆனால், மரண பயத்தில் அவர் அழைத்த அவரது அழைப்புக்கு எந்த பதிலும் வரவில்லை!
இரண்டாம் உலகப்போருக்குப் பின் மூழ்கடிக்கப்பட்ட மிகப்பெரிய ரஷ்ய கப்பல் மாஸ்க்வா என்பது குறிப்பிடத்தக்கது.