‘உதட்டில் முத்தமிடுவதும், உடலைத் தீண்டுவதும், இயற்கைக்கு புறம்பான குற்றம் அல்ல’ என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில், பீரோவில் வைத்திருந்த பணம் காணாமல் போனது. இது பற்றி தன் 14 வயது மகனிடம் அவர் விசாரித்தார். மொபைல் போன் ரீசார்ஜ் செய்ய, பணம் எடுத்ததாக கூறிய மகன், மொபைல் ரீசார்ஜ் செய்யும் கடையின் உரிமையாளர் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதையும் தெரிவித்தான். தன் உதட்டில் கடை உரிமையாளர் முத்தமிட்டதாகவும், பிறப்புறுப்பை தொட்டதாகவும் தெரிவித்தான்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை, இது பற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ், கடை உரிமையாளரை கைது செய்தனர். ‘ஜாமின்’ கேட்டு கடை உரிமையாளர், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அனுஜா பிரபுதேசாய், கடை உரிமையாளருக்கு ஜாமின் வழங்கி கூறியதாவது:
ஒருவரின் உதட்டில் முத்தமிடுவதும், உடலைத் தீண்டுவதும் இயற்கைக்கு புறம்பான குற்றம் அல்ல. மேலும், மருத்துவப் பரிசோதனையில், சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார். மேலும், வழக்கு விசாரணை விரைவில் துவங்குவதாக தெரியவில்லை. அதனால், மனுதாரர், 30 ஆயிரம் ரூபாய் செலுத்தி, சொந்த ஜாமின் பெற்றுக் கொள்ள, நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.
இவ்வாறு நீதிபதி கூறினார்.