திமுக ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில், உதயநிதியின் பெயரை டெல்லியில் ராஜ்யசபாவில் ஒலித்த ராஜேஸ்குமாருக்கு மீண்டும் ராஜ்ய சபா எம்.பி பதவி அளிக்கப்பட்டிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 6 ராஜ்ய சபா எம்.பி இடங்கள் காலியானதைத் தொடர்ந்து, ஜூலை 10 ஆம் தேதி 6 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது. இதில் திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து, திமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி இடங்களுக்கு போட்டியிடும் 3 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1 இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்ய சபா எம்.பி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, திமுகவில் ராஜ்ய சபா எம்.பி பதவி யாருக்கு வாய்ப்பு உள்ளது என்ற கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில்தான், திமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், நாமக்கல் ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பெயரை டெல்லியில் ராஜ்யசபாவில் ஒலித்த, ஏற்கெனவே, ராஜ்ய சபா எம்.பியாக உள்ள கே.ஆர்.என். ராஜேஸ்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.
ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 3 வேட்பாளர்களின் பின்னணி பற்றி ஒரு பார்வை பார்ப்போம்.
தஞ்சை கல்யாணசுந்தரம்
தஞ்சை கல்யாணசுந்தரம் தற்போது திமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். தஞ்சை திமுகவில் சீனியரான இவர் சோழமண்டல தளபதி என திமுகவினரால் வர்ணிக்கப்பட்ட கோசி மணியின் வலது கரமாக இருந்தவர்.
தஞ்சை கல்யாணசுந்தரத்தின் சொந்த ஊர் கும்பகோணத்துக்கு அருகே உள்ள பம்ப படையூர் கிராமம். கல்யாணசுந்தரம் சர்ச்சைகளில் சிக்காதவர். கும்பகோணம் வட்டார கிராமங்களில் புருஷன் பொண்டாட்டி சண்டையைக்கூட பேசி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர் நல்லவிதமாகவே சொல்கிறார்கள்.
கல்யாணசுந்தரம் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அந்த தொகுதி மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு ஒதுக்கப்பட்டதால், கல்யாண சுந்தரத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதே நேரத்தில், டெல்டா மாவட்டத்தில் இருந்து யாரும் அமைச்சரவையில் இடம்பெறாததால், அதை நிவர்த்தி செய்யும் விதமாக மாநிலங்களவை உறுப்பினராக கல்யாணசுந்தரத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்துள்ளர்.
கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் வன்னியர் பட்டப்பெயர் கொண்டவர். அதனால், இவர் வன்னியரா கள்ளரா என்ற குழப்பமும் நிலவுவது உண்டு. ஆனால், இவர் வன்னியர் என்ற பட்ட பெயரை கொண்ட கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
வடசென்னை கிரிராஜன்
திமுக சட்டத்துறை இணைச் செயலாளரான கிரிராஜன் நீண்ட காலமாக வட சென்னை மக்களவைத் தொகுதிக்கும் வடசென்னைக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தவர். 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதி திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியடைந்தார்.
கலைஞர் கருணாநிதி தலைமையிலும் மு.க. ஸ்டாலின் தலைமையிலும் சென்னையில் நடக்கும் திமுக நிகழ்ச்சிகளுக்கு திரளான வழக்கறிஞர்களுடன் அணிவகுப்பவர் கிரிராஜன். திமுகவினருக்காக சட்ட உதவிகளை செய்பவர். திமுக சட்டத் துறை பிரமுகர்கள் தொடர்ந்து ராஜ்ய சபாவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கிரிராஜன் ராஜ்ய சபா எம்.பி.யாகிறார்.
கே.ஆர்.என். ராஜேஸ்குமார்
திமுகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரான கே.ஆர்.என். ராஜேஸ்குமார் கடந்த முறை ஒன்றரை ஆண்டு பதவிக்காலம் கொண்ட ராஜ்யசபா எம்.பி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜ் சபா எம்.பி.யாகி நாடாளுமன்றத்திற்கு சென்றதும் அங்கே உதயநிதி பெயரை சொல்லி கவனத்தைப் பெற்றார். டெல்லியில் ராஜ்ய சபாவில் உதயநிதியின் பெயரை ஒலிக்க செய்ததன் மூலம் தனது எம்.பி. பதவியை இந்த முறையும் உறுதிப்படுத்தியுள்ளார். இப்போது ராஜேஸ்குமாருக்கு முழுமையான 6 ஆண்டு கால ராஜ்யசபா எம்.பி பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“