சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று காலை சென்னை காமராஜர் சாலயில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள் என கூறி தமிழில் தனது உரையை தொடங்கினார்.
அதன் பிறகு பேசிய அவர், “உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி அடிக்கடி கூறி வருகிறார். தமிழ் மொழியின் இலக்கணமும், இலக்கியமும், பாரம்பரியமிக்கது. தொன்மை வாய்ந்தது. கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது.
தமிழர்கள் பலஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தி இருப்பது பெருமையாக இருக்கிறது. தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தின் புகழை மீட்டெடுக்க வேண்டும்.
தமிழ் மொழியை தமிழ்நாடு தாண்டி பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது. மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியை மூன்றாவது முறையாக சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழ்மொழி நாடு முழுவதும் பரப்பப்பட வேண்டும்” என்றார்.