சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவிக்கையில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலத்தை பின்னோக்கி செலுத்தும் ஆற்றல் இருந்தால் மோடி அவர்கள் ஈழத்தில் போரே நடக்க விட்டிருக்க மாட்டார் என்கிறார்.
எனக்கும் கூட அதே ஆற்றல் இருந்து காலத்தை பின்னோக்கி செலுத்தும் வாய்ப்பு இருந்தால், நானும் குஜராத்தில் மோடி முதலமைச்சராக விடாமல் தடுத்து பல ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்படாமல் காப்பாற்றி இருப்பேன். ஈழத்தில் 2009ல் இனப்படுகொலை நடைபெற்றபோது குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது இனப்படுகொலையை எதிர்த்து அவருடைய குரல் என்ன?
அன்றைக்கு போரை நடத்தியது இந்தியாவை ஆண்ட காங்கிரசுதான் என்று மோடிக்கும் தெரியும். சக மனிதச்சாவை சகித்துக் கொண்டிருக்க முடியாது , அவர் அன்றைக்கு குரல் கொடுத்திருந்தால் அவருக்கும் அப்படியான பார்வை இருந்தது, ஒருவேளை அதற்கான வாய்ப்பு இருந்திருக்கும் என்று நம்பலாம். அப்படி எந்த பார்வையும் இல்லாதபோது தற்போது அண்ணாமலை சொல்வதை நம்புவதற்கில்லை.
இன்று எங்கள் தலைவர் அந்த மண்ணில் இல்லை என்பதால் ஆளாளுக்கு கருத்து சொல்கிறார்கள். ஈழம் அண்ணாமலையால்தான் சாத்தியம் என்றால் எப்படி சாத்தியம்? இன்று நீங்கள் எங்கள் தலைவரை மகாத்மா என்கிறார். இதை பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமை சொல்லுமா? பிரபாகரன் ஒரு மகாத்மா என்று தமிழ்நாட்டில் உள்ள பாஜக தீர்மானம் நிறைவேற்றுமா?
உலகத்திற்கு முன் பயங்கரவாதி என்று சொன்னதே இவர்கள்தானே? சரி பாஜக ஈழம் அமைத்துக் கொடுக்கட்டுமே பாரப்போம்? இந்து ஈழம் அமைப்போம் என்கிறார் அண்ணாமலை. எங்கள் தலைவர் அந்த களத்தில் நின்றபோது ஏன் இந்து ஈழம் என்ற பேச்சே எழவில்லை?
தமிழர்கள் நாங்கள் இந்துக்களே இல்லை என்கிறோம். பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் வருகிற சீக்கியர்கள், பௌத்தர்கள், இந்துக்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்கிறீர்கள்,
35 ஆண்டுகள் ஆகிவிட்டது ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து, இன்று வரை அவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.