பாகிஸ்தானில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக இம்ரான் கான் சரியாக அரசாங்கத்தை வழிநடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து இம்ரான் கான் தலைமையிலான அரசுமீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, அவர் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் இம்ரான் கான், தன்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், “என்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. என்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். நான் ஒரு வீடியோவைப் பதிவு செய்துள்ளேன். அந்த வீடியோவில் நான் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளேன். நான் கொல்லப்பட்டால், அந்த வீடியோ பகிரங்கமாக வெளியிடப்படும்” என்று கூறினார்.