துபாய்: ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத்மறைவைத் தொடர்ந்து புதிய அதிபராக ஷேக் முகமது தேர்வு செய்யப்பட்டார்.
இவர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். ராணுவத்தில் பல முக்கிய பதவிகளை இவர்வகித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் அதிபராக ஷேக் முகமது பதவி வகிப்பார். இந்நிலையில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷேக் முகமது பின் சையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஷேக் முகமது புதிய அதிபராக தேர்வு செய்யப் பட்டதற்கு இந்தியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஷேக் முகமது பின் சயீத்அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தால், இந்தியா-ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையேயான உறவுகளுக்கு ஒரு பெரிய முக்கியத்துவம் கிடைக்கும் என்றும் இந்தியாவின் ‘‘உண்மையான நண்பராக’’ இருக்கும் ஷேக் முகமது இந்தியா மீது மிகுந்த மரியாதை கொண்டவர் என்பதாலும் 2 நாடுகளிடையேயான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அங்கு வசிக்கும் இந்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஷேக் முகமது, கடந்த 2016, 2017-ம் ஆண்டுகளில் பிரதமர் மோடியை இந்தியாவில் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும் பிரதமர் மோடி 2015, 2018, 2019-ம் ஆண்டுகளில் துபாய் வந்தபோது பிரதமர் மோடியை, ஷேக் முகமது சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் 2 நாடுகளிடையிலான உறவு மேலும் பலப்படும் என இந்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து துபாயில் உள்ள அல் தோபோவி குழும தலைவரும், இந்தியருமான சுரேந்தர் சிங் காந்தாரி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராக இருக்கும் ஷேக் முகமது அமீரக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி. அவர் இந்தியாவின் உண்மையான நண்பர்’’ என்று தெரிவித்தார்.