லண்டன் : ”வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலை பார்க்கும் பழக்கம் ஆக்கப்பூர்வமானது அல்ல, அது கவனச்சிதறலை ஏற்படுத்தும். அலுவலகம் வந்து பணியாற்றுவதே சிறந்தது,” என, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அதிருப்தி
கொரோனா பரவல் துவங்கியவுடன் ஒரு சில அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்து துறைகளும், ‘ஒர்க் பிரம் ஹோம்’ எனப்படும், வீட்டில் இருந்தே பணியாற்றும் புதிய பழக்கத்திற்கு மாறின. கொரோனா பரவல் குறைய துவங்கியதை அடுத்து, பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் திரும்ப உத்தரவிட்டன.இது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ‘
ஒயிட் ஹாட் ஜூனியர்’ என்ற நிறுவனம் தங்கள் ஊழியர்களை அலுவலகம் வர சமீபத்தில் உத்தரவிட்டது. இதில் உடன்பாடு இல்லாத 800 ஊழியர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தனர். ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் கூட இந்த பிரச்னை இருப்பதால், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் அலுவலகம் வருமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. ஊழியர்கள் தாங்கள் விரும்பும் வரை வீட்டில் இருந்தே வேலை பார்க்க, ‘டுவிட்டர்’ நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.உலகளவில் நிலைமை இப்படி இருக்க, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:என்னை பொறுத்தவரை வீட்டில் இருந்து வேலை பார்ப்பது கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது.
புதிய சிந்தனை
வேலைக்கு நடுவே திடீரென எழுந்து, குளிர்சாதன பெட்டியிலிருக்கும் பாலாடை கட்டியை எடுத்து மீண்டும் கணினி முன் வந்து அமர்ந்தால், நாம் என்ன வேலையை செய்தோம் என்பதே மறந்துவிடுகிறது. நாம் மீண்டும் அலுவலகம் திரும்ப வேண்டும். நிறைய மனிதர்கள் சூழ நாம் அமர்ந்து வேலை பார்க்கும்போது தான், ஆக்கப்பூர்வமாகவும், சுறுசுறுப்பாகவும், புதிய சிந்தனைகளுடன் இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement