கடும் வெப்பத்தால் டெல்லியைச் சுற்றி வெப்பத் தீவுகள் உருவாகின்றன – நாசா எச்சரிக்கை!

புதுடெல்லி,
கோடைகாலம் தொடங்கியது முதல் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 50 டிகிரி செல்சியசை நெருங்கியது.

இந்த நிலையில்,  அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின், ஜெட் புரபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) சமீபத்தில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளது. அதில் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவாக பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாசா, விண்வெளியில் இருந்து நிலத்தின் வெப்பநிலையை அளவிடும் செயற்கைக்கோள் கருவியை பயன்படுத்தியுள்ளது. ‘சுற்றுச்சூழல் அமைப்பு விண்வெளி வெப்ப ரேடியோமீட்டரை பயன்படுத்திய விண்வெளி நிலைய பரிசோதனை(எகோஸ்ட்ரெஸ்)’ என்ற செயற்கைக்கோள் கருவியின் மூலம், சுமார் 12,350 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கணக்கிட்டு இந்த படம் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த மாத தொடக்கத்தில் பதிவான டெல்லியின் வெப்பநிலையை சித்தரிக்கும் படத்தை நாசா வெளியிட்டது. அதன்படி, டெல்லியின் நகர்ப்புறத்தில் “வெப்ப தீவுகள்”  எனப்படும் அதீத வெப்பமான பகுதிகளில் வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்டை (39 டிகிரி செல்சியஸ்) எட்டியது. அதேபோல, டெல்லியின் சுற்றுவட்டார  அண்டை கிராமங்களிலும் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் அளவு எட்டியது. அதே வேளையில், டெல்லியை சுற்றியுள்ள பிற தூர பகுதிகளில் கிட்டத்தட்ட 40 டிகிரி பாரன்ஹீட் (கிட்டத்தட்ட 5 டிகிரி செல்சியஸ்) வெப்பம் குறைவாக பதிவாகி இருந்தது தெரிய வந்தது.
நாசாவின் அறிக்கை படி, சில நகரங்களில், இரவில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருந்தது தெரிய வந்தது. டெல்லியிலும் இரவு நேரத்தில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வெப்பநிலை பதிவுகள் அனைத்தும்,  மே 5 அன்று பதிவு செய்யப்பட்டு மே 13 அன்று வெளியிடப்பட்டவையாகும்.
டெல்லியை போன்ற நகரங்களில், மனித நடவடிக்கைகள் காரணமாகவும் மற்றும் உள்கட்டமைப்பு சூழலில் பயன்படுத்தப்படும் பொருட்களால், சுற்றியுள்ள கிராமப்புறங்களை விட இந்த நகரங்களில் கணிசமாக வெப்பம் அதிகரித்திருக்க வழிவகுத்துள்ளன என்று நாசா தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கானப்படுவதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த கடுமையான வெயில் காரணமாக டெல்லி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், வீட்டிலேயே தங்கி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.