திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வட கேரளா மாவட்டங்களான கோழிக்கோடு மற்றும் கண்ணூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்த 5 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலைஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைத் தவிர, மற்ற ஏழு மாவட்டங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் உள்ளன.
கனமழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று (திங்கட்கிழமை) கேரளா வந்துள்ளனர். தமிழகத்தின் அரக்கோணத்தில் இருந்து தலா 100 பேர் கொண்ட 5 குழுக்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வேண்டுகோளின் பேரில், இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் இந்தக் குழுக்கள் நிறுத்தப்பட்டன.
வெள்ள மீட்பு கருவிகள், சரிந்த கட்டமைப்பு தேடுதல் மற்றும் மீட்பு உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பி.பி.இ. கருவிகள் போன்றவற்றை இந்தக் குழுக்கள் தன்னகத்தே கொண்டதாக தெரிவித்து உள்ளது. அரக்கோணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
மழை சீற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநில அரசு கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையின் உதவியை நாட வேண்டியவர்கள் 1077 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
அதே நேரத்தில், மலைப்பாங்கான பகுதிகளுக்கான பயணங்கள் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளன. கேரள பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையின்படி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.