கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தில் புகுந்த தேர்!: தேர் ஏறி ஒருவரும், கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும் உயிரிழப்பு..!!

சாம்ராஜ்நகர்: கர்நாடகா மாநிலத்தில் தேர் திருவிழாவில் இருவர் உயிரிழந்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட் என்ற இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பார்வதாம்பா எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.  ஒரு கட்டத்தில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த தேர் அதிவேகமாக கூட்டத்திற்குள் சென்றது. இதில் ஒருவர் தேரின் சக்கரம் ஏறியதிலும், மற்றொருவர் கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிகளவில் கூடி வடத்தை இழுத்ததால் தேர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்து எம்.எல்.ஏ. நிரஞ்சன் குமார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர், காயம் அடைந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தேர் சக்கரத்தில் சிக்கி பலியான சர்பபூஷன், சுவாமி ஆகியோரின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.