காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்கோயிலில் கருடசேவை உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில்ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று கருடசேவை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 4.40 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தின் மீது உற்சவர் வரதராஜப் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 5 மணிக்கு மேற்கு ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் தொட்டாச்சாரியாருக்கு காட்சியளிக்கும் வைபவம் நடந்தது. இதைத் தொடர்ந்து கருட வாகனத்தில் வரதராஜப் பெருமாள் கோபுர தரிசனம் நடைபெற்றது.
பின்னர், விளக்கடி கோயில் தெருவில் ஸ்ரீதூப்புல் வேதாந்த தேசிகர் சன்னதிக்கு சென்ற பெருமாளுக்கு நைவேத்தியம் மற்றும் சீர்வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. இதையடுத்து, பிள்ளையார் பாளையம் வழியாக கச்சபேஸ்வரர் கோயிலை அடைந்த பெருமாளுக்கு குடை மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், புதிய குடைகளுடன், சங்கர மடம் அருகே உள்ள வாகன மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ராஜ வீதிகள் வழியாக நடந்த வீதியுலா பிற்பகல் 12.30 மணி அளவில் நிறைவடைந்தது. இதில் ஏராளமானபஜனை குழுவினர் பங்கேற்று சுவாமி வேடமிட்டு பஜனை செய்தனர்.
பெருமாள் செல்லும் வழிகள் மற்றும் நகரம் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அனுமந்த வாகன உற்சவம் நடைபெற்றது. வரும் 19-ம் தேதி தேரோட்டமும், 21-ம் தேதி காலை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளன.