காலநிலை மாற்றம் காரணமாக 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் 9 கோடி இந்தியர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
இது தொடர்பான ஆய்வை உலகளாவிய உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “பருவநிலை மாற்றத்தால் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒன்பது கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பட்டினியால் வாடுவார்கள். இந்தியாவில் தானியங்கள், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், வேர்கள் மற்றும் கிழங்குகளின் உணவு உற்பத்தி குறியீடு காலநிலை மாற்றம் காரணமாக 1.627-ல் இருந்து 1.549 ஆக குறையலாம். அதாவது, 2030-ஆம் ஆண்டு காலத்தில் சராசரி கலோரி நுகர்வில் சிறிய சரிவு உருவாகலாம்.
அதாவது, ஒரு நபருக்கு 2,697 (கிலோ கலோரி/ ஒருநாள்)-லிருந்து 2,651 (கிலோ கலோரி/ ஒருநாள்) ஆக குறைய நேரிடலாம். 2100-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் சராசரி வெப்பநிலை 2.4 டிகிரி செல்ஸியலிருந்து 4.4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கோடை காலங்களில் வெப்ப அலைகள் 2100-ஆம் ஆண்டளவில் மூன்று மடங்கு அல்லது நான்கு மடங்காக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த சரசாரி வெப்ப நிலை உயர்வால் இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மேலும், காலநிலை மாற்றத்தால் விவசாய விளைச்சல் 2041 – 2060 காலக்கட்டத்தில் 1.8 முதல் 6.6 சதவீதமாகவும், 2061 – 2080 காலக்கட்டத்தில் 7.2 முதல் 23.6 சதவீதமாகவும் குறையக் கூடும். இதனை தவிர்க்க அரிசியிலிருந்து மற்ற பயிருக்கு மாற வேண்டிய தேவை உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரவத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கும் என்று நம்புவோம்.