புதுடெல்லி: கியான்வாபி மசூதியில் இன்று கடைசி நாள் கள ஆய்வு தொடங்கியது. இதன் முழு அறிக்கை நாளை வாரணாசியின் சிவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் காசி எனும் வாரணாசியில் பழம்பெருமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இதை ஒட்டியபடி முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட கியான்வாபி மசூதி உள்ளது.
காசி விஸ்வநாதர் கோயிலை உடைத்து அதன் ஒரு பகுதியில் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாகப் புகார்கள் உள்ளன. இதனால், மசூதியின் இடத்தை கோயிலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் பல ஆண்டுகளாக உள்ளன.
இதன் மீதான ஒரு வழக்கும் வாரணாசி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, மசூதியின் வெளிப்புறச்சுவரில் கோயிலின் பக்கமாக உள்ள சிங்கார கவுரி அம்மனை தரிசிக்க வேண்டும் என்று ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. வருடம் ஒருமுறை மட்டும் நிலவும் தரிசனத்தை, முன்புபோல், அன்றாடம் தொடரவேண்டி இவ்வழக்கு கடந்த வருடம் தொடுக்கப்பட்டது.
இதை விசாரித்த வாரணாசியின் சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் ஒரு முக்கிய உத்தரவிட்டார். இதில், சிங்கார கவுரி அம்மனை தரிசிக்க அனுமதி அளிப்பதற்காக, கியான்வாபியில் கள ஆய்விற்கு அனுமதித்தார். இந்தக் கள ஆய்வு, தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (திங்கள்கிழமை) காலை 8.00 மணிக்கு தொடங்கியது.
புகைப்படம், வீடியோ பதிவுகளுக்கான ஆய்வில், ஆணையர்களாக மூன்று பேர் கொண்ட குழு நீதிமன்றத்தால் அமர்த்தப்பட்டுள்ளது. இதில், அஜய் குமார் மிஸ்ரா, விஷால்சிங் மற்றும் அஜய் பிரதாப்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த மே 5 இல் தொடங்கிய ஆய்வு, மசூதி நிர்வாகத்தினரால் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால் நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு மீண்டும் நீதிமன்ற தலையீட்டால் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.
மசூதியின் அடித்தளம், மேல்பகுதி என இதுவரை சுமார் 80 சதவிதம் கள ஆய்வு முடிவடைந்துள்ளன. இதன் அடித்தளத்தில் சுமார் 30 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அறைகள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வுகளில் வழக்கிற்கு சாதகமான ஆதாரங்கள் கிடைத்ததாக மனுதாரர் வழக்கறிஞர்களும், எதுவும் கிடைக்கவில்லை என மசூதி தரப்பிலும் கூறியுள்ளனர். எனினும், இதன் அறிக்கை நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின் முழு விவரம் தெரியவரும்.
இந்த ஆய்விற்காக வாரணாசி முஸ்லிம்கள் இடையே எதிர்ப்பு கிளம்பும் என அஞ்சி பலத்த போலீஸ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆய்விற்கான நேரத்தில் காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் தரிசனமும் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.
கோயில் மற்றும் மசூதியைச் சுற்றியுள்ள சுமார் ஒரு கி.மீ தொலைவிலுள்ள கடைகளும் மூடி வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆய்வின்போது மனுதார்கள் மற்றும் மசூதி நிர்வாகிகள் தரப்பினர் சேர்த்து 52 பேர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கள ஆய்விற்காக மசூதியின் உள்ளே செல்லும் பார்வையாளர்கள் அனைவருக்கும் தங்கள் கைப்பேசிகளை கொண்டுசெல்ல அனுமதியில்லை. கடைசிநாளான இன்று மீதம் உள்ள பகுதியின் ஆய்வும் முடிக்கப்பட உள்ளது.