புதுடெல்லி: கியான்வாபி மசூதியில் தொழுகைக்காக கை, கால் கழுவும் ஒசுகானாவிற்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனுள் சிவலிங்கம் இருப்பதாகக் கள ஆய்வில் கிடைத்த தகவலால் வாரணாசி சிவில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியில் கள ஆய்வு திங்கள்கிழமை நிறைவு பெற்றது. கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்த ஆய்வில், தொழுகைக்காக கை, கால்கள் கழுவும் ஒசுகானா எனும் நீர்குளத்திலும் ஆய்வு நடைபெற்றது. இதற்காக, ஒசுகானாவில் இருந்த நீர் அனைத்தும் மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் குளத்திற்குள் நடைபெற்ற கள ஆய்வில் ஒசுகானாவின் மத்தியப் பகுதியில் சிவலிங்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை, சிங்காரக்கவுரி அம்மன் தரிசன வழக்கின் ஒரு மனுதாரரின் வழக்கறிஞரான ஹரி சங்கர் ஜெயின் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பான ஒரு மனுவையும் தரிசன சிங்காரக்கவுரி அம்மன் வழக்கை விசாரிக்கும் நீதிபதி ரவி குமார் திவாகர் முன்பாக சமர்ப்பித்தார். அந்த மனுவை ஏற்ற நீதிபதி, உடனடியாக மசூதியின் உள்ள இருக்கும் ஒசுகானாவை கையகப்படுத்த வாராணசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
அந்த இடத்தில் முஸ்லிம்கள் ஒசு செய்யவும் தடை விதித்த நீதிபதி, வெறும் 20 பேர் மட்டுமே தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவர் என்றும், கையகப்படுத்தப்பட்ட இடத்தில் மத்திய பாதுகாப்பு போலீஸாரை அமர்த்தும் படியும் இப்பகுதியின் பாதுகாப்பிற்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பு எனவும் நீதிபதி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எனினும், ஒசுகானாவில் மத்தியப் பகுதியில் இருப்பது நீறுற்றுக்கான கல் என்று முஸ்லிம்கள் கூறியுள்ளனர். இதை மற்றவர்களிடமும் கேட்டு உறுதிசெய்த பின் நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். முஸ்லீம்களின் மனுவை கவனத்தில் எடுக்கும் முன்பாக நீதிமன்றம் ஒசுகானாவை சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவால் வாரணாசியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மசூதி வளாகத்தின் சுவரில் வெளிப்புறமாக இருக்கும் சிங்கார கவுரியை தினமும் தரிசனம் செய்யும் வழக்கில் புதிய திருப்பமும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், அப்பகுதியில் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியாக இருந்தது எனும் புகார் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இதனிடையே, மூன்று தினங்களுக்கு முன் களஆய்விற்கு தடை கேட்டு மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி உச்ச நீதிமன்றத்தை அனுகியிருந்தது. இதற்கு உடனடியாகத் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்ற அமர்வு, அந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ வேதிக் சனாதன் சங் தலைவர் ஜிதேந்தர்சிங் கூறும்போது, “மசூதியின் ஒசுகானாவில் 12.5 அடி உயர சிவலிங்கம் கிடைத்துள்ளது. இதைக் கேட்டு கொந்தளிக்காமல் இந்திய இந்துக்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். இச்சூழலை யார் வேண்டுமானாலும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தக் கூடும். நாம் சட்டரீதியாகப் போராடி முஸ்லீம்களிடம் இழந்ததை பெறுவோம். இந்தப் பட்டிலில் காசி, மதுரா, தாஜ்மகால் மற்றும் குதுப் மினார் ஆகியன உள்ளன” எனத் தெரிவித்தார்.
தகவல் வெளியானது எப்படி?
சிங்காரக்கவுரி அம்மன் வழக்கின் மனுதாரரின் சார்பில் வழக்கறிஞர் சங்கர் ஜெயினும் களஆய்வின் பார்வையாளர்களில் ஒருவராக உள்ளார். தனது உடல்நிலை சரியில்லை எனக் கூறி இன்று தனக்கு பதிலாகக் கள ஆய்விற்கு அவரது மகன் விஷ்ணு ஜெயினை அனுப்பியிருந்தார். வழக்கறிஞர்கள் மற்றும் 52 பார்வையாளர்களுக்கு தம் கைப்பேசிகளை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
இச்சூழலில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனவும், அவசரமாக அவரிடம் பேச வேண்டும் எனக் கூறி கள ஆய்வின் அதிகாரி ஒருவரிடம் கைப்பேசியை விஷ்ணு ஜெயின் வாங்கியுள்ளார். அதில் ஒசுகானாவை படம் எடுத்ததுடன் அதை தன் தந்தைக்கும் அனுப்பியதால் இந்த விவகாரம் வெளியில் பரவியதாகக் கருதப்படுகிறது. இவர் மீது இதுவரை சட்டரீதியான நடவடிக்கை எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை.