வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அம்மனுக்கு பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. தினமும் பூஜை நடத்த அனுமதி கோரி 5 பெண்கள் வாரணாசி மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த குழு அமைத்தது. இதன்படி, மே 6-ல் களஆய்வு தொடங்கியது. ஆனால் இந்தக் குழுவின் ஆணையரை மாற்றக் கோரி முஸ்லிம்கள்தரப்பில் வழக்கு தொடுத்தனர்.இதை ஏற்க மறுத்த சிவில் நீதிமன்றம் மேலும் 2 வழக்கறிஞர் களை ஆணையருக்கு உதவியாக நீதிமன்றம் சார்பில் அமர்த்தி கள ஆய்வை தொடர உத்தர விட்டார். இதற்கும் தடை கேட்டு மசூதி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்கமுடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி கூறிவிட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் காலை 8.00 மணிக்கு தொடங்கிய கள ஆய்வு, நண்பகல் 12.00 மணிக்கு முடிவடைந்தது. 2-வது நாளாக நேற்றும் ஆய்வு நடைபெற்றது. அப்போது வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று ஆய்வு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் 17-க்குள் ஆய்வை முடித்துவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.