கிருஷ்ணகிரி அருகே மாணவர்களிடையே மோதல்: பத்தாம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பத்தாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பண்ணிஹள்ளி புதூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த சனிக்கிழமையன்று மாணவர்களிடையே மாம்பழம் சாப்பிடும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றபோது தகராறு தொடர்பான மாணவர் ஒருவர் பள்ளிக்கு வரவில்லை. அந்த மாணவருக்கு மற்றொரு மாணவனின் செல்போன் மூலம் வாய்ஸ் மெசேஜ் மூலமாக மிரட்டல் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு மாணவர்களும் இன்று பள்ளிக்கு வந்தபோது இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஒரு மாணவன் தான் மறைத்து வைத்திருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து மற்றொரு மாணவன் தோள்பட்டையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவனின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக காயமடைந்த மாணவனை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு சமுதாய உடல்நிலை மையத்திற்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டினம் போலீஸார் பன்னிஹள்ளி புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.