தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறி, மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்து வருகிறது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் கடுமையான மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே, மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் மின்தடை ஏற்பட்டதாக அப்போது செந்தில்பாலாஜி கூறினார்.
இந்நிலையில் திராவிட மாடல் குறித்த திமுக பயிலரங்கில், அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இரண்டு மூன்று நாட்கள்தான் மின்வெட்டு ஏற்பட்டது. இதற்குக் காரணம், மத்திய அரசு மாநிலத்துக்கு அனுப்பும் மின்சாரப் பிரச்னைதான். இந்த நிலைமை இப்போது சரி செய்யப்பட்டது. தற்போது, தமிழகம் மின் உபரியாக உள்ளது, மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்கிறது.
மற்ற மாநிலங்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தாலும் மாநிலத்தின் மின்சார தேவை தன்னிறைவுக்கு வந்தது. நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், முதல்வரின் நடவடிக்கையால் தமிழகம் மின் உற்பத்தியில் எந்த சிக்கலையும் சந்திக்கவில்லை. இதுதான் திராவிட மாடல்.
குஜராத்தில் கூட மின் பற்றாக்குறை இருந்தது. சமீபத்தில் அங்குள்ள அரசு தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவித்தது., குஜராத் மாடலை விட தமிழகத்தின் திராவிட மாடல்தான் சிறந்தது.
குஜராத் மாடல் பற்றி பேசுபவர்கள் 2024 பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கூறுவார்கள்.
2024 தேர்தலில் வெற்றி பெறுவதே கட்சியின் இலக்கு என்பதால், இதுபோன்ற கூற்றுக்களைப் பொருட்படுத்தாமல், திமுக தொண்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், தேர்தலில் வெற்றிபெற, தமிழ்நாட்டில் இருந்து செலுத்தப்படும் ஒவ்வொரு ₹1 வரிக்கும் மத்திய அரசு 35 பைசா மட்டுமே திருப்பித் தருகிறது என்ற விவரத்தை தொண்டர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
திராவிடம் என்பது வெறும் சித்தாந்தமாக இல்லாமல் இங்குள்ள மக்கள் மீது சுமத்தப்பட்ட அடிமைத்தனத்தை அகற்றுவதற்கான ஆயுதமாக இருக்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“