Thangam thennarasu and Annamalai twitter fight over Tamilanangu controversy: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்த தமிழணங்கு புகைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஸ’ என்ற வட மொழிச் சொல் குறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்திருந்த நிலையில், ஸ்டாலின் பெயரை எவ்வாறு அழைக்க வேண்டும் என விளக்குமாறு அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு, ரோம் நகரில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த வீடியோவை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை என மக்கள் கொண்டாடி வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும் அந்த வீடியோவை பகிர்ந்தார். அத்துடன், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்திருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழணங்கு ஓவியத்தையும் பகிர்ந்து, ”எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே” என குறிப்பிட்டிருந்தார்.
முதல்வரின் ட்வீர் வைரலாகிட, தமிழ்த்தாய் ஓவியத்தில் தலைவிரிக்கோலத்துடன் தமிழன்னை இருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் கறுப்பு நிறத்துடன் இருப்பதாகவும் பாஜகவினர் விமர்சிக்க தொடங்கினர். அதற்கு சிலர், தமிழ் கறுப்புதான், தமிழர் கறுப்பு தான், தமிழன்னையும் கறுப்புதான் என பதில் தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஸ்டாலின் பகிர்ந்த தமிழன்னை புகைப்படத்திற்கு மாற்றாக புதிதாக தமிழ்த்தாயின் ஒரு ஓவியத்தை பதிவிட்டு, எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என ட்வீட் செய்திருந்தார்.
அவர் ட்வீட்டை பாஜகவினர் ட்ரெண்ட் செய்திட, ஓவியத்தில் இருப்பது போல் தமிழ் தாய் என்று வரவே வராது, ‘தமிழ்த் தாய்’ என்றுதான் வரவேண்டும். ‘த்’ என்ற ஒற்று போடாமல் இருப்பதற்கு பலரும் அண்ணாமலையை விமர்சித்து தொடங்கினர். மேலும், அந்த போட்டோவில் வடமொழி சொல்லான ‘ஸ’ எழுதப்பட்டிருப்பதும் சர்ச்சையானது.
இதனை விமர்சிக்கும் விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத்தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில், இதற்கு பதிலளித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, ஸ்டாலின் பெயரை எவ்வாறு அழைக்க வேண்டும் என அமைச்சர் விளக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: அ.தி.மு.க.வில் ராஜ்ய சபா சீட் யாருக்கு? 2 இடங்களுக்கு 60 பேர் போட்டி
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள “ஸ” என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். “தமிழ் தமிழ்” என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!
“ஸ”வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.