திருவனந்தபுரம்: கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகலுக்குப் பிறகு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து உள்ளது. இந்நிலையில், கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று எர்ணாகுளம், இடுக்கி உள்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204.5 மி.மீட்டருக்கு மேல் பலத்த மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இன்று கொல்லம், பத்தனம்திட்டா உள்பட 7 மாவட்டங்களுக்கும், நாளை எர்ணாகுளம், இடுக்கி உள்பட 6 மாவட்டங்களுக்கும் 18ம் தேதி எர்ணாகுளம், திருச்சூர் உள்பட 8 மாவட்டங்களுக்கும், 19ம் தேதி கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மலையோர பகுதிகள், கடற்கரை உள்பட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.