இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ‘RRR’ படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்திருந்தார் ஜூனியர் என்.டி.ஆர். படம் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ‘டெம்பர்’, ‘நானாக்கு ப்ரேமதோ’, ‘ஜனதா கேரேஜ்’, ‘ ஜெய் லவ குசா’, ‘அரவிந்த சமேத வீர ராகவா’ என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த பிறகுதான், ‘RRR’ படத்தில் ஒப்பந்தமானார். ராஜமெளலி படத்தில் நடித்துவிட்டாலே பேன் இந்தியா ஆர்டிஸ்ட் கேட்டகரியில் சேர்ந்துவிடலாம். அதன்படி படமும் அவரின் உழைப்பும் பயங்கரமாகப் பேசப்பட்டது.
‘RRR’ ஜூனியர் என்.டி.ஆர்-ரின் 29வது படம். இவரின் 30வது படத்தை இயக்க அதிக வாய்ப்பிருக்கும் இயக்குநர்கள் பட்டியலில் அட்லி, ‘கே.ஜி.ஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல், கொரடாலா சிவா என பலரின் பெயர்கள் இருந்தன. அதில் கொரடாலா சிவாவை டிக் செய்திருக்கிறார், ஜூனியர் என்.டி.ஆர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கவிருக்கிறது. ராஷ்மிகா மந்தனா ஹீரோயின், ரத்னவேலு ஒளிப்பதிவு, அனிருத் இசை என்ற தகவலும் வெளியே வர ஆரம்பித்துவிட்டது. இதனை முடித்துவிட்டு, ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கிறார் தாரக் (ஜூனியர் என்.டி.ஆர்). இவர் கொரடாலா சிவா இயக்கும் படத்தை முடிப்பதற்கும் அவர் பிரபாஸை வைத்து ‘சலார்’ படத்தை முடிப்பதற்கும் சரியாக இருக்கும்.
‘கே.ஜி.எஃப்’ படத்தில் பணியாற்றிய அதே டெக்னீஷியன்கள்தான் இந்தப் படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள். இந்தப் படத்தை முடித்த பிறகு, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அது என்.டி.ஆரின் 32வது படம். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ராம் சரண் படம், ‘இந்தியன் 2’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, ஷங்கர் இந்தப் படத்திற்கான பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ‘உப்பென்னா’ இயக்குநர் புச்சி பாபுவிடம் ஸ்போர்ட்ஸ் படத்திற்கான கதை ஒன்றையும் கேட்டு ஓகே செய்து வைத்திருக்கிறார் என்.டி.ஆர்.
ஷாரூக் கான் படத்தை முடித்த பிறகு, இயக்குநர் அட்லி, அல்லு அர்ஜுனை இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.