கைதான ஐஏஎஸ் அதிகாரியுடன் அமித்ஷா புகைப்படம் -ட்விட்டரில் பகிர்ந்த பட இயக்குனர் மீது வழக்கு

பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்காலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பது போன்ற ஒரு  புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டதற்காக  இந்தி திரைப்பட இயக்குனர் அவினாஷ் தாஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜார்க்கண்டில் சுரங்கத் துறை செயலராக ஐஏஎஸ் அதிகாரியான பூஜா சிங்கால் பதவி வகித்து வருகிறார். இவர் குந்தி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பூஜாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தியதில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதன் அடிப்படையில் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பூஜா சிங்கால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜார்கண்டில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பூஜா சிங்கால் விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

image
இந்த நிலையில் இந்தி பட இயக்குனரான அவினாஷ் தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கைதான ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா சிங்காலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பது போன்ற ஒரு  புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இப்புகைப்படம் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி விழா மேடையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து இயக்குனர் அவினாஷ் தாஸ் மீது அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பழைய புகைப்படத்தை பகிர்ந்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதற்காகவும், மூவர்ணக்கொடி அணிந்த பெண்ணின் படத்தைப் பகிர்ந்ததன் மூலம் தேசியக் கொடியை அவமதித்ததற்காகவும் அவினாஷ் தாஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்கலாம்: கர்நாடகா: பெண் வழக்கறிஞர் மீது கொடூர தாக்குதல் – ஒருவர் கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.