விருதுநகரில் மாவட்ட கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு, கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் விசாரணைக் கைதிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வீரச்சோழன் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான இருளாண்டி, வசந்தப்பாண்டி, மற்றொரு இருள் என்ற இருளாண்டி, சிலம்பரசன் ஆகிய நான்கு பேரும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு விருதுநகர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் நான்கு பேரும், விருதுநகர் கிளைச் சிறையின் மேல் பாகத்தில் உள்ள அறையில் ஒன்றாக அடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், காலை உணவுக்காக கைதிகளை சிறை அதிகாரிகள், திறந்துவிட்டுள்ளனர். அப்போது அவர்கள் 4 பேருக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிலம்பரசனை, மற்ற மூவரும் சேர்ந்து அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளனர். இந்த சண்டையில் சிலம்பரசனுக்கு, சில பற்கள் உடைத்து விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த பிரச்சினை குறித்து காயமடைந்த சிலம்பரசனிடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை வழக்கிலிருந்து ஜாமீன்பெற சிலம்பரசன் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதைத் தெரிந்துக்கொண்ட இருளாண்டி, வசந்தப்பாண்டி, இருள் என்ற இருளாண்டி ஆகிய மூவரும், தங்களுக்கும் சேர்த்து ஜாமீனுக்கு முயற்சி எடுக்குமாறு சிலம்பரசனை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு சிலம்பரசன் மறுப்புத்தெரிவிக்கவும் ஆத்திரமடைந்த மற்ற மூவரும், சிலம்பரசனை தாக்கி அடித்து உதைத்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, சிறைக் கண்காணிப்பாளர் தாமரைக்கனி, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கைதிகள் இருளாண்டி, வசந்தபாண்டி, இருள் என்ற இருளாண்டி ஆகிய மூவரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். காயம்பட்ட சிலம்பரசன் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.