பெங்களூரு ஹெப்பல் பேருந்து நிலையத்தில் சட்டவிரோத விளம்பர பதாகையின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஹெப்பல் பேருந்து நிழற்குடைக்கு இரவு 9.40 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அந்த நபர் நிழற்குடையில் இருந்த பெஞ்சில் அமர்ந்தவுடன் அவர் மீது திடீரென மின்சாரம் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பேருந்து தங்குமிடத்தின் உலோகப் பகுதியை அந்த இளைஞர் தொட்டபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விளம்பர பலகைக்கு சட்டவிரோதமாக மின்சாரம் இழுக்கப்பட்டதால் உயிரிழப்பு!
விளம்பரப் பலகையை ஒளிரச் செய்வதற்காக தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று சட்ட விரோதமாக வைத்த மின்சாரக் கம்பியில் இளைஞர் தொடர்பு கொண்டதால் மின்சாரம் பாய்ந்ததாக பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் (பெஸ்கோம்) தெரிவித்துள்ளது. பெஸ்காம் ஹெப்பால் உட்பிரிவின் நிர்வாக பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் பிரிவு அதிகாரி ஆகியோர் அடங்கிய இன்ஜினியர்கள் குழு அந்த இடத்தைப் பார்வையிட்டு, பேருந்து நிழற்குடைக்கு மின்சாரம் எடுப்பதற்காக ஒரு தனியார் விளம்பர நிறுவனம் மூலம் அலுமினிய வயர் மூலம் மின்சாரம் அனுமதியின்றி நீட்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
உயிரிழந்தவரின் உடல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஹெப்பள் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் துறை சாராத விபத்து என்றும், இது உயிரிழப்பு என்பதால், சட்டவிரோதமாக மின் இணைப்புகளை பெற்ற தனியார் விளம்பர நிறுவனம் மீது பெஸ்காம் கண்காணிப்பு பிரிவு புகார் அளித்துள்ளது.
2020 டிசம்பரில், நுகர்வோர் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதால், விளம்பரப் பதாகை வைத்த நிறுவனத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சமீபத்தில் கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுக்கப்பட்டதாக பெஸ்கோம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மின் கம்பியில் அறுந்து மின்சாரம் பாய்ந்து மக்கள் உயிரிழந்த சம்பவம் இது மூன்றாவது முறையாகும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM