உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 4 லட்சம் மதிப்புடைய 6.190 கிலோ வெள்ளியை, ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமாக பிற மாநிலங்களில் இருந்து ரயில் மார்கமாக வரும் மது பானங்கள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி தங்கம், வெள்ளிப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க தமிழக ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு, பயணிகளின் உடமைகளை சோதனையிட்டு வந்தனர்.
அப்போது சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் நடைமேடைக்கு வந்தடைந்தது. அப்போது ரயில் வந்தடைந்த 4-வது நடைமேடையில் கண்காணித்து வந்த சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், பயணிகளின் உடமைகளை சோதனை நடத்தினர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த சந்தேகத்திற்குரிய நபரை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவரது பையை சோதனை செய்து பார்த்தபோது அதனுள் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 6.190 கிலோ வெள்ளி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அந்த நபரை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படையினர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சலமலசெட்டி பவன் குமார் (36) என்பதும், அவர் கொண்டுவந்த வெள்ளிப் பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் ஏதுமில்லை என்பதும் தெரியவந்தது.
மேலும் அந்த நபர் இது வியாபாரத்துக்காக கொண்டுவரப்பட்ட நகை எனவும், கடத்தப்பட்டது அல்ல எனவும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லததால் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சலமலசெட்டி பவன் குமாரையும், பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளியையும் அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM