திருவனந்தபுரம்: சபரிமலையில் படி பூஜை நடத்தும் போது மழையில் நனையாமல் இருக்க 18ம் படிக்கு மேல் ₹ 70 லட்சம் செலவில் தானியங்கி கூரை அமைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது படி பூஜையாகும். இதற்குதான் மிக அதிகமாக ₹75 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இரவு தீபாராதனைக்கு பிறகு தந்திரி, மேல்சாந்தி ஆகியோரின் முன்னிலையில் 18 படிகளுக்கும் மலர் தூவி சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த சமயத்தில் பலமுறை கோயில் நடை மூடப்பட்டு பிறகு திறக்கப்படும். படி பூஜை நடைபெறும்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். படி பூஜையின் போது மழை பெய்தால் பெரும் சிரமம் ஏற்படும். இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 18ம் படிக்கு மேல் கண்ணாடி கூரை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த மேற்கூரையால் கோயில் கொடிமரத்தில் சூரிய ஒளி நேராக விழுவதில்லை என்று தேவபிரசன்னத்தில் தெரியவந்ததை தொடர்ந்து, கண்ணாடி கூரை அகற்றப்பட்டது. அதன் பிறகு படி பூஜை நடைபெறும் போது மழை பெய்தால் பிளாஸ்டிக் தார்பாய் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 18ம்படிக்கு மேல் தானியங்கி மேற்கூரை அமைக்க ஐதராபாத்தை சேர்ந்த ஒரு கட்டிட நிறுவனம் முன்வந்துள்ளது. ஹைட்ராலிக் முறையில் இயங்கும் இந்த மேற்கூரைக்கு செலவு ₹70 லட்சம் ஆகும். தேவைப்படும்போது இதை கூரையாகவும், தேவையில்லாத சமயங்களில் இருபுறங்களிலும் மடக்கியும் வைக்கலாம். சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம்தான் இந்த தானியங்கி மேற்கூரையை வடிவமைத்துள்ளது. நாளை காலை சிறப்பு பூஜையுடன் இதற்கான பணிகள் தொடங்கும். 3 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.