மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், கவிதை வடிவிலான ஒரு பதிவை மராத்தி நடிகை கேதகி சிதலே (29) தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் ‘நரகம் காத்திருக்கிறது’, ‘பிராமணர்களை நீங்கள் வெறுக்கிறீர்கள்’ என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இவை என்சிபி தலைவர் சரத் பவாரை குறிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக என்சிபி சார்பில் தானே போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், கேதகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகை கேதகியை தானே போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வரும் 18-ம் தேதி வரை போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.
இதுபோல சரத் பவார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டதாக நிகில் பாம்ரே (23) என்ற மாணவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, சரத் பவாருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி மகாராஷ்டிர பாஜக செய்தித் தொடர்பாளர் விநாயக் அம்பேத்கரின் கன்னத்தில் என்சிபி தொண்டர்கள் அறைவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.-பிடிஐ