‘சலார்’ படத்தின் அப்டேட் கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக, நடிகர் பிரபாஸின் ரசிகர் ஒருவர் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப்’ படம் வசூலில் சாதனை புரிந்து தென்னிந்தியா திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்தது. இதையடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடயே பான் இந்தியா படமாக கடந்த மாதம் 14-ம் தேதி வெளியான ‘கே.ஜி.எஃப். 2’, எதிர்பார்ப்புகளையும் மீறி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இதுவரை 1,200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. குறிப்பாக இந்தியில் அமீர்கானின் ‘தங்கல்’ படத்தின் வசூலை முறியடித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸுடன் கூட்டணி சேர்ந்துள்ள பான் இந்தியா படம் ‘சலார்’. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் பூஜை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார். இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில், இந்தாண்டு ஏப்ரலில் படத்தை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதுவரை 30 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ளநிலையில், அதன்பிறகு இந்தப் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் விரக்தியடைந்த நடிகர் பிரபாஸின் ரசிகர் ஒருவர், படக்குழுவுக்கு கடிதம் மூலம் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கெனவே பிரபாஸின் ‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட படங்களின் தோல்வியால் நாங்கள் மன வேதனையிலும், ஏமாற்றத்திலும் இருக்கிறோம். இந்தப் படத்தில் அதுபோன்று இருக்காது என நினைக்கிறோம். மே மாதத்தின் 2 வாரங்கள் ஆகியும் படம் குறித்த எந்த அப்பேட்டையும் இயக்குநர் பிரசாந்த் நீல் அல்லது ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிடவில்லை. அதனால் இந்த மாதத்திற்குள் ‘சலார்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடாவிட்டால் கண்டிப்பாக தற்கொலை செய்துகொள்வேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘ராதே ஷ்யாம்’ படத்தின் எதிர்மறையான விமர்சனங்களால், பிரபாஸின் ரசிகரான ரவி தேஜா தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது இந்தக் கடிதம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘சலார்’ படத்தில் பிருத்விராஜ் சுகுமாறன், திஷா பதானி, ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தாண்டு படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, அடுத்த வருடம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.