சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்திள் மின்சாரம் தாக்கி கூலி தொழாலாளி உயிரிழந்திருக்கிறார். அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி-55. கூலி தொழிலாளியான இவர், காத்திருப்பு என்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் காலி பாட்டில்களை சேகரித்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் ரவி காத்திருப்பு டாஸ்மாக் கடை அருகே அமைந்துள்ள நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வளாகத்திற்குள் சென்று அங்கு கிடந்த காலி பாட்டில்களை சேகரித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தனியார் நிறுவனத்தினர் அமைத்திருந்த மின்விளக்கு கம்பத்தில் இருந்து மின்சாரம் அவர்மீது பாய்ந்துள்ளது. இதனால் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்தில் உயிரிழந்த ரவியின் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தும் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க… “செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில் சாலையில் பந்தல் அமைத்து கிராம மக்கள் தொடர் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.அசம்பாவிதங்களை தவிற்க 100 க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM