இந்திய நிகழ்வுகள்
மராத்தி நடிகைக்கு 18 ம் தேதி வரை காவல்
தானே-தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மராத்தி நடிகை கேதகி சிதலேவை, 18ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., ஆட்சி நடக்கிறது. தானே நகரில் வசிக்கும் மராத்தி மொழி நடிகை கேதகி சிதலே, 29, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், பிராமணர்களை வெறுக்கிறார்; அவருக்கு நரகம் காத்திருக்கிறது’ எனக் கூறியிருந்தார்.இது தொடர்பான புகாரின் பேரில், தானே போலீசார் வழக்குப் பதிவு செய்து, கேதகியை நேற்று முன்தினம் கைது செய்தனர். தானே மாநகர விடுமுறை கால நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். இம்மாதம் 18ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதேபோல், சரத் பவாரை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட, நாசிக் நகரைச் சேர்ந்த நிகில் பாம்ரே, 23, என்ற கல்லுாரி மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனங்களுக்கு தீ வைப்பு
லதேஹர்: ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் உள்ள பஸ்கார்ச்சா என்ற பகுதியில், சாலை மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அங்கு நேற்று முன்தினம் இரவு வந்த மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள், அங்கிருந்த ‘ரோடு ரோலர்’ உள்ளிட்ட 10 வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கும் விதமாக, அங்கு சுற்றறிக்கை ஒன்றையும் வைத்துவிட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
@Image@சாலை விபத்து: 3 பேர் பலி
பலன்பூர்: குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பலன்பூர் என்ற பகுதியில், நேற்று அதிகாலை பயணியருடன் தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்றது. அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், சாலையோரம் நிற்கச் சென்ற லாரி மீது வேகமாக மோதியது. இதில், பஸ் ஓட்டுனர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும், 30 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக நிகழ்வுகள்
கார் மோதி முதியவர் பலி
மயிலம், : மயிலம் அருகே அடுத்தடுத்து இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் பைக்கில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மயிலம் அடுத்த பந்தமங்கலம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் 65. விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு திண்டிவனத்திலிருந்து தனது பைக்கில் வீட்டுக்கு சென்றார்.சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை கேணிப்பட்டு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தை திருப்பும்போது பின்னால் வந்த கார் மோதி கீழே விழுந்தார். உடன் மோதிய காருக்கு பின்னால் வந்த மற்றொரு காரும் தேவராஜ் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில் மயிலும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
பஸ் மோதியதில் மூதாட்டி காயம்
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே பஸ் மோதிய விபத்தில் மூதாட்டி காயமடைந்தார்.சின்னசேலம் அடுத்த ஈசாந்தை கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து மனைவி பாக்கியம்,85; இவர் கடந்த 13ம் தேதி மதியம் 4.20 மணியளவில் சின்னசேலம் பஸ்நிறுத்தம் அருகே சாலையோரமாக நடந்து சென்றார்.
அப்போது அதேதிசையில், ஆத்துார் தாலுகா, தெற்குகாட்டை சேர்ந்த முத்துசாமி மகன் சீனிவாசன்,29; என்பவர் ஓட்டி வந்த டி.எண். 77 .டி.3399 என்ற பதிவெண் கொண்ட தனியார் பள்ளி பஸ் பாக்கியத்தின் மீது மோதியது.இதில் காயமடைந்த பாக்கியத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு ஆத்துார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
போலி நகை அடமானம் வைத்த மூவர் கைது
அம்பத்துார் : போலி நகை அடமானம் வைத்து, 32 லட்சம் மோசடி செய்த மூவர், மூன்று ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டனர்.சென்னை அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம் சாலை, கே.கே., நகரில் தனியார் வங்கி உள்ளது. இதில், அம்பத்துார், டி.ஜி.அண்ணா நகரைச் சேர்ந்த தமீம் அன்சாரி, 33, என்பவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, கடந்த 2018 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, சிறிது சிறிதாக, 210 சவரன் நகையை அடகு வைத்து, 32 லட்சம் ரூபாய் பெற்றனர்.இதையடுத்து, 2019ம் ஆண்டு செப்டம்பரில், வங்கி அதிகாரிகள் ஓராண்டுக்கும் மேலாக மீட்கப்படாத நகைகளை ஆய்வு செய்தனர்.
இதில், தமீம் அன்சாரி வாயிலாக அடகு வைக்கப்பட்டவை, ‘போலி’ நகைகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, டிசம்பரில், வங்கி நிர்வாகி அம்பத்துார் போலீசில், போலி நகை அடமானம் வைத்தவர்கள் குறித்து புகார் செய்தார். போலீசார், தமீம் அன்சாரி உள்ளிட்ட நால்வரை தேடி வந்தனர். இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம், அம்பத்துார் தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த தமீம் அன்சாரி, பாடியைச் சேர்ந்த முகமது கபீர், 39, மற்றும் முகமது சித்திக், 34, ஆகியோரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
மின் மாற்றியில் தீ
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில், மின் மாற்றியில் எழுந்த தீ பிழம்பால் பரபரப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்று சுவரையொட்டி மின் மாற்றியுள்ள உள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் மின் மாற்றியின் மேற்பகுதியில் பொருத்துப்பட்டுள்ள பீங்கான் பகுதியில் தொடர்ந்து தீ பிழம்பு ஏற்பட்டது.
இதனால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் மின் மாற்றி அருகே சாலையோர கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அதனை சீரமைத்தனர். பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து மிகுதியான நான்கு முனை சந்திப்பில் மின் மாற்றியில் ஏற்பட்ட திடீர் தீ பிழம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
டூவீலரில் இருந்து விழுந்த தாய், மகள் வேன் மோதி பலி
அனுமந்தன்பட்டி குமரேசன் 40, டூவீலரில் மனைவி, மகன், மகளு டன் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அருகில் ரோட்டின் ஓரம் நின்ற காரின் கதவு திடீரென திறக்கப்பட்டது. டூவீலர் நிலை தடுமாறி குமரேசன் குடும்பத்தினர் ரோட்டில் விழுந்தனர்.அப்போது சென்னையில் இருந்து சபரிமலை சென்ற தண்டையார்பேட்டை டிரைவர் திவான் 34, ஓட்டிய வேன் சக்கரங்கள் கஸ்துாரி, ஸ்ரீஜா மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். குமரேசன், மகன் ஹரிஷ் 14, காயமடைந்தனர். வேனை பறிமுதல் செய்த உத்தமபாளையம் போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
உலக நிகழ்வுகள்
கறுப்பினத்தைச் சேர்ந்த 10 பேரை சுட்டுக் கொன்றஅமெரிக்க இளைஞர்
பபல்லோ-அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பல்பொருள் அங்காடியில், 18 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கறுப்பினத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர்; மூவர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், பபல்லோ நகரில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் வந்தார். ராணுவ உடை அணிந்து, அதன் மேல் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத, ‘புல்லட் புரூப்’ உடை அணிந்திருந் தார். தலையில் அணிந்திருந்த ‘ஹெல்மெட்’டில், ‘கேமரா’ பொருத்தப்பட்டு இருந்தது. திடீரென துப்பாக்கியை எடுத்த இளைஞர், கறுப்பினத்தவர்களை குறிவைத்து சரமாரியாக சுடத் துவங்கினார். இதில், 10 பேர் பலியாகினர்; மூவர் காயம் அடைந்தனர். அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அந்த இளைஞரின் பெயர் பேடன் கென்ட்ரான், 18, என்பது தெரிய வந்தது.
நியூயார்க்கின் கான்க்ளின் என்ற இடத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், கறுப்பின மக்கள் மீது வெறுப்புணர்வு உடையவர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.அந்த இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம், அவரது சமூக வலைதளத்தில் இரண்டு நிமிடங்கள் நேரலையாக ஒளிபரப்பாகியது.
இதற்கிடையே, அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரில், சுற்றுலா பயணியரை கவரும், ‘தி பீன்’ என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு, நுாற்றுக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் திரண்டு இருந்தனர்.அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 16 வயது சிறுவன் பலியானார். யார் சுட்டது என்பது தெரியவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த சிறுவன் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை.