தலைநகர் டெல்லியில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நேற்று அங்கு வெப்பநிலை 49.2 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு உயர்ந்தது.
கோடை காலம் தொடங்கியது முதல் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 49 டிகிரியை தாண்டியதால் கடுமையான வெப்ப அலை நிலவியது. இந்த கோடையில் தலைநகரில் ஏற்படும் 5 -வது வெப்ப அலை இதுவாகும்.
வடமேற்கு டெல்லியின் முங்கேஷ்பூரில் அதிகபட்சமாக 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள நஜாப்கரில் 49.1 டிகிரி செல்சியஸ் மற்றும் அண்டை நகரமான குர்கானில் 48.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இந்த நகரத்தில் உச்சபட்சமாக மே 10, 1966 அன்று 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. அதற்குப்பின் நேற்றுதான் அங்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதேபோன்று ராஜஸ்தானில் 47.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. எனினும், இது மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிக்கலாம்: அசாமில் தொடரும் கனமழை: உயிரிழப்புகளால் திணறும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM