டெல்லி: தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10-ல் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் பதவிக்காலம் ஜூன் 29-ல் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வரும் 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரி முன்பு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர். இதனிடைய, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதில், 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில், காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 3 இடங்களில் திமுக வேட்பாளர்களான சு.கல்யாணசுந்திரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.