தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு, ரோம் நகரில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, நிகழ்ச்சியின் போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த வீடியோவை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை என மக்கள் கொண்டாடி வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும் அந்த வீடியோவை பகிர்ந்தார். அத்துடன், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்திருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழணங்கு ஓவியத்தையும் பகிர்ந்து, எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என குறிப்பிட்டிருந்தார்.
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே! https://t.co/4nAVp6m7Cb pic.twitter.com/eu9g1WTVgI
— M.K.Stalin (@mkstalin) May 15, 2022
முதல்வரின் ட்வீர் வைரலாகிட, தமிழ்த்தாய் ஓவியத்தில் தலைவிரிக்கோலத்துடன் தமிழன்னை இருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் கறுப்பு நிறத்துடன் இருப்பதாகவும் பாஜகவினர் விமர்சிக்க தொடங்கினர். அதற்கு சிலர், தமிழ் கறுப்புதான், தமிழர் கறுப்பு தான், தமிழன்னையும் கறுப்புதான் என பதில் தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஸ்டாலின் பகிர்ந்த தமிழன்னை புகைப்படத்திற்கு மாற்றாக புதிதாக தமிழ்த்தாயின் ஒரு ஓவியத்தை பதிவிட்டு, எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என ட்வீட் செய்திருந்தார்.
அவர் ட்வீட்டை பாஜகவினர் ட்ரெண்ட் செய்திட, ஓவியத்தில் இருப்பது போல் தமிழ் தாய் என்று வரவே வராது,‘தமிழ்த் தாய்’ என்றுதான் வரவேண்டும். ‘த்’ என்ற ஒற்று போடாமல் இருப்பதற்கு பலரும் அண்ணாமலையை விமர்சித்து தொடங்கினர். மேலும், அந்த போட்டோவில் வடமொழி சொல்லான ‘ஸ’ எழுதப்பட்டிருப்பதும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே pic.twitter.com/blg72my7yX
— K.Annamalai (@annamalai_k) May 15, 2022
இரண்டு கட்சிகளும், தங்களது தமிழன்னை புகைப்படங்களை ஷெர் செய்யக்கோரி கட்சி உறுப்பினர்களுக்கு வாட்ஸ்அப்பில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு போட்டோகளையும் போட்டிப்போட்டு கட்சியினர் பகிர தொடங்கியுள்ளனர். எது ஒரிஜினல் தமிழணங்கு என்று பாஜக மற்றும் திமுகவினரிடையே சமூகவலைதளங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.