லும்பினி:
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேபாளம் வந்தடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார். இருவரும் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி இருவருக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தினர்.
கோவிலை ஒட்டி அமைந்துள்ள அசோக தூண் அருகே இருவரும் தீபம் ஏற்றினர். கி.மு. 249-ல் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்ட தூண், லும்பினி புத்தர் பிறந்த இடம் என்பதற்கான முதல் கல்வெட்டுச் சான்றாகத் திகழ்கிறது.
இந்திய பிரதமர் மோடி, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின், நேபாளத்துடன் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்நிலையில், புத்த துறவிகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நேபாளம் என்றால் உலகிலேயே மிகப் பழமையான நாகரிகத்தையும், கலாசாரத்தையும் கொண்டிருக்கும் நாடு என்று அர்த்தம்.
இந்தியா, நேபாளத்தின் நட்பு வலுப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சூழ்நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும்.
புத்த பகவான் மீது நமது இரு நாடுகளின் பக்தியும், நம்பிக்கையும் நம்மை ஒரே இழையில் இணைக்கிறது. அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்களாக ஆக்குகிறது.
தியாகம் செய்வதன் மூலமே நாம் சிறப்பை அடைய முடியும் என்பதற்கு புத்தர் உதாரணம். புத்தர் தனக்கு கிடைத்த ஞானத்தின் மூலம் மக்களை நல்வழிப்படுத்தினார். நான் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம், ஆராய்ந்து உணருங்கள் என புத்தர் கூறியதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…100 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 11 பேர் பலி