திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் ‘திருச்சி மாவட்ட தொழில் மையம்’ செயல்பட்டு வருகிறது. இங்கு தொழில் முனைவோர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதோடு, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுக்குப் பயனாளிகளை தேர்வு செய்து வங்கிகளின் மூலமாக கடன் பெற்றுத் தருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட தொழில் மையத்துக்கு வரும் பயனாளிகளிடம் தொழில் சம்பந்தமான கடன் பெற்றுத் தருவதற்காக, லஞ்சம் வாங்கப்படுவதாக திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
அதனடிப்படையில் இன்று மாலை சுமார் 4 மணியளவில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் ரெய்டில் இறங்கினர். இதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவீந்திரன், உதவிப் பொறியாளர் கம்பன் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதையடுத்து உறையூரில் உள்ள தொழில் மைய மேலாளர் ரவீந்திரன் வீடு, திருவெறும்பூரில் உள்ள மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் கம்பன் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொழில் மைய மேலாளர் ரவீந்திரனுக்கு ஒரு பர்சனல் மேனேஜர் போல, கமிஷன் விவகாரங்கள் அனைத்தையும் உதவிப் பொறியாளர் கம்பன் கவனித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், தொழில் கடனுக்காக வந்தவர்களிடம் கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கமிஷனாகக் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. “ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ரெய்டில், 3 லட்சம் ரூபாய் வரை கணக்கில் வராத பணம் கிடைத்திருக்கிறது. தொடர்ச்சியாக ரெய்டு நடந்து வருகிறது. ரெய்டின் முடிவில்தான் என்னென்ன கைப்பற்றப்பட்டன, என்ன நடந்தது போன்றவை தெரியவரும்” என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.