திருமலை: திருச்சானூர் கோயிலில் தங்க ரதத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த உற்சவத்தின் 2வது நாளான நேற்று தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க சுவாமி வீதி உலா வந்து அருள் பாலித்தார். கோயிலின் நான்கு மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தாயாரை வழிபட்டனர். கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு நேற்று மதியம் பத்மாவதி தாயார் உற்சவருக்கு பால், மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.