லக்னோ: தென்னாப்பிரிக்காவில் நடந்த காதல் சந்திப்பின் தொடர்ச்சியாக, இலங்கை பெண்ணை ேதடிபிடித்து உத்தரபிரதேச இளைஞர் திருமணம் செய்து கொண்டார். உத்தர பிரதேச மாநிலம் கவும்பி மாவட்டத்தைச் சேர்ந்த கணினி ஆப்ரேட்டர் பல்ராம் என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சவுதிக்கு வேலைக்கு சென்றார். அங்கிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் பணிபுரியும் போதுதான் இலங்கையைச் சேர்ந்த மதுஷா ஜெயவன்ஷியைச் சந்தித்தார். இவர், கணினி படிப்பு படிக்க தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியது. தனது படிப்பை முடித்துவிட்டு, மதுஷா தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றுவிட்டார். ஆனால் பல்ராமுக்கு தனது காதலி இலங்கை சென்றது தெரியாது. அதிர்ச்சியடைந்த அவர், கணினி பயிற்சி மையத்தின் மூலம் மதுஷாவின் முகவரியை பெற்று கிட்டத்தட்ட 6 மாத போராட்டத்திற்கு பின் இலங்கை சென்றடைந்தார். அங்கு இருவரும் சந்தித்துக் கொண்டனர். சில மாதங்களுக்கு பின் மீண்டும் பல்ராம் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். இதற்கிடையில், இலங்கையில் திடீரென பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், இருவரும் மீண்டும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தனது காதலியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடு தென்னாப்பிரக்காவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு பல்ராம் வந்தார். இலங்கையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். மதுஷாவுக்கு சுற்றுலா விசா வாங்கிக் கொண்டு, தனது மனையை இந்தியாவுக்கு (உத்தரபிரதேசம்) பல்ராம் அழைத்து வந்தார். காதல் தம்பதிகளை கிராமத்தினர் மற்றும் பெற்றோர் வரவேற்றனர். இருவருக்கும் கடந்த 8ம் தேதி பாரம்பரிய முறைப்படி திருமண சடங்குகள் செய்யப்பட்டன. பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் பல கடல்களை தாண்டி, தனது காதலியை கரம்பிடித்த பல்ராமை பலரும் பாராட்டி வருகின்றனர்.