சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்தது. விருதுநகரில் இதற்கான நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் வருகை தவிர்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர். தமிழக பாஜகசார்பில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்குக்கு செல்லும் பிரதமர், அங்கு நடக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
அதில், நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 26-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில், ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். பெங்களூரு – சென்னை இடையிலான 4 வழி விரைவுச்சாலை திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் வழியாக இந்த சாலை செல்கிறது. இந்த சாலையின் 3-ம் கட்டபணிகள், ஆந்திராவின் சித்தூர்மாவட்டத்தின் ராமாபுரம் கிராமத்தில் இருந்து பெரும்புதூர் வரை106 கி.மீ. தூரத்துக்கு ரூ.3,472 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னையில் அமைய உள்ள பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவுக்கும் (multi modal logistics park) பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை அருகில் மப்பேட்டில் 158 ஏக்கர் நிலம் இத்திட்டத்துக்காக கண்டறியப்பட்டுள்ளது. ரூ.1,200 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த ஆண்டு கையெழுத்தானது. இதேபோல கோவை உட்பட நாடுமுழுவதும் அரசு – தனியார் பங்களிப்பில் 34 பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.
தருமபுரியில் இருந்து ஒசூருக்கு ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் சாலையில் 2-வது மற்றும் 3-வது தொகுப்பு திட்டப் பணிகளுக்கும் மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 227 திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
இவைதவிர சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் 4 திட்டங்கள், ரயில்வே, நகர்ப்புற வீட்டு வசதி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து பேருரையாற்றுகிறார்.
இந்த திட்டங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிப்பதுடன், திட்டங்கள் தொடர்பான ஏற்பாடுகளையும் செய்யும்படி தலைமைச் செயலரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே, சென்னை பெரும்பாக்கத்தில் நகர்ப்புற மேம்பாட்டுவாரியத்தின் சார்பில் முதல்முறையாக, ரூ.116.37 கோடியில் முன்கட்டுமானம் (பிரீ காஸ்ட்) முறையில் தயாரித்து 12 கட்டிடத் தொகுப்புகளில் 1,152 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு வீட்டுக்கான ஒதுக்கீட்டு ஆணையை பிரதமர் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், மதுரை – தேனி இடையிலான அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் முடிந்துள்ள நிலையில் அதையும் பிரதமர் தொடங்கி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் தொடங்கி வைக்கவுள்ள திட்டங்களுக்கான ஏற்பாடுகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.
கடந்த மாதம் டெல்லி சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்து அவற்றைநிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினார். இந்நிலையில், சென்னை வரும் பிரதமரிடம் தமிழகம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து மீண்டும் வலியுறுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் 2-வதுமுறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.
இலங்கை மக்களுக்கு தமிழகம்சார்பில் நிவாரணப் பொருட்கள் மத்திய அரசு வாயிலாக அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும், தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகள் செய்வது குறித்தும் பிரதமரிடம் முதல்வர் பேச வாய்ப்புள்ளது.
சென்னையைச் சுற்றி 5 இடங்களில் உள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை அடுத்த மாதத்துடன் நிறுத்தப்பட உள்ள நிலையில் அதை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் வழங்குவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.