புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வடக்கு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த சனிக்கிழமை சந்தை, சுற்றுவட்டாரத்தில் ரொம்பவே பிரபலம். காய்கறிகள் துவங்கி வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் இந்தச் சந்தையில் வாங்கிவிடலாம்.
ஆங்காங்கே, கமிஷன் கடைகள் வரவு, சூப்பர் மார்க்கெட்களின் வளர்ச்சி போன்றவைகளால் கடந்த பல ஆண்டுகளாகவே இந்தச் சனிக்கிழமை சந்தை, இருந்த இடம் தெரியாமலே போய் இருக்கிறது.
அங்கு எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும், குளமங்கலத்தைச் சேர்ந்த சின்னதுரை மட்டும், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அதே இடத்தில் பாயாசக்கடையைத் தொடர்ந்து வருகிறார். நூற்றுக்கணக்கான கடைகளால் நிரம்பி வழிந்த சனிக்கிழமை சந்தையில் தற்போது, சின்னதுரையின் பாயாசக்கடை மட்டுமே இருக்கிறது. சந்தை இல்லையென்றாலும், சனிக்கிழமை சந்தை இருந்த இடத்துக்குப் போனால் சேமியா பாயாசம் குடிக்கலாம் என்றே பக்கத்து ஊர்களில் இருந்து பொதுமக்கள் சின்னதுரையின் பாயாசக்கடையைத் தேடி வருகின்றனர்.
“நான் கொடுத்து பழகிட்டேன், அவங்க குடிச்சி பழகிட்டாங்க. அதனால, இந்தக் கடையை விட முடியலை. என்னைத் தேடி வர்றவங்களை ஏமாத்தக்கூடாதுன்னுதான் இன்னைக்கும் பாயாசக்கடையை போட்டுக்கிட்டு இருக்கேன்” என்று கூறி நெகிழ வைக்கிறார் சின்னதுரை.
அவரிடம் பேச்சுக்கொடுத்தோம்,
“30, 40 வருஷத்துக்கு முன்னால எல்லாம், இங்க சுத்திலும் கடைகளா இருக்கும். மக்கள் கூட்டம் அலைமோதும். காய்கறியில இருந்து ஜவுளி, பேன்ஸி, கருவாடு வரைக்கும் எல்லாமும் ஒரே இடத்துல கிடைக்கும். நூற்றுக்கணக்கான மூட்டைகள்ல பச்சை காய்கறிகள், தேங்காய் எல்லாம் வந்து இறங்கும்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடியிலயிருந்து எல்லாம் வியாபாரிகள் இங்க வந்து மொத்தமா வாங்கிட்டுப் போவாங்க. விவசாயிங்க பலரும் நேரடியா சந்தையில விற்பனை செய்வாங்க. பக்கத்து ஊர்கள்லயே இன்னைக்கு கமிஷன் கடைங்க அதிகம் வந்து சந்தையை எல்லாம் காலி பண்ணிட்டாங்க. நான் மட்டும்தான் கிட்டத்தட்ட 35 வருஷமா இங்க தொடர்ந்து, கடை போட்டுக்கிட்டு இருக்கேன். எப்பவாது மீன் கடை வரும். அப்பவும் சரி, இப்பவும் சரி என்னோட சேமியா பாயாசத்தை குடிக்கிறதுக்குன்னே ஒரு கூட்டம் வரும். ஆரம்பத்துல சந்தை கூட்டம் இருக்கப்ப, எனக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
இப்ப எல்லாம் அதுல பாதி கூட கிடைக்கிறதுல்ல. காலையில 7 மணிக்கெல்லாம், மொத ஆளா வந்துடுவேன். மாலை 4 மணி வரைக்கும் கடையை வச்சிருப்பேன். சேமியா பாயாசத்தைப் பொறுத்தவரைக்கும், ரவா, சேமியா, வெல்லம், சவ்வரிசி, தேங்காய், கடலைப் பருப்பு, ஏலக்காய், சுக்கு எல்லாம் சேர்க்கணும். மூலப்பொருள்களை மொத்தமா ரூ.300க்கு வாங்கணும். அதைக் காய்ச்சி வித்தா ரூ.500க்கு வியாபாரம் ஓடும். இதுல ரூ.200 நமக்கு லாபமா கிடைக்கும். வீட்டுல நானும் என் மனைவியும்தான். இந்த வருமானத்தை வச்சே ஓட்டிடுவோம். சின்ன டம்ளர் ரூ.5, பெரிய டம்ளர் ரூ.10ன்னு விற்கிறேன். இப்ப, மூலப்பொருள்கள் விலைவாசி எல்லாம் உயர்ந்து போச்சு. எனக்கு லாபமும் குறைஞ்சி போயிருச்சி. ஆனாலும், நான் கடை போடுறதை ஒரு நாள் கூட நிறுத்துனது இல்லை. நிறுத்தவும் மாட்டேன்.
புயலோ, மழையோ எது அடிச்சாலும் சனிக்கிழமை கடை போட தவற மாட்டேன். அதுக்கு முக்கிய காரணம் எனக்குன்னு இருக்கற வாடிக்கையாளர்கள்தான். குறிப்பா, குழந்தைங்க சேமியா பாயாசத்தை ரொம்பவே விரும்புவாங்க. வாடிக்கையாளர்களை என்னால ஏமாத்த முடியலை. சனிக்கிழமை ஆகிட்டாலே சேமியா பாயாசம் கிடைக்கும்னு என்னைத் தேடி வர்றாங்க. அதனாலயே தவறாம கடை போட்டுக்கிட்டு இருக்கேன். எனக்கு உடம்பு சரியில்லைன்னா, என்னோட மனைவி எல்லாத்தையும் பார்த்துப்பாங்க. அப்பப்ப எனக்கு கூட, மாட ஒத்தாசை எல்லாம் பண்ணுவாங்க. லாபம் இல்லாட்டிக்கூட, என் மூச்சு இருக்க வரைக்கும் இந்த சேமியா பாயாசக்கடையைத் தொடரணும் அதுதான் என்னோட ஆசை” என்கிறார்.