நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை மற்றும் தாய்லாந்தின் நிரந்தரத் தூதரகங்கள் இணைந்து 2022 மே 13ஆந் திகதி சர்வதேச வெசாக் தினத்தின் மெய்நிகர் ரீதியான நினைவேந்தலை நடாத்தியது.
1999இல் இலங்கை மற்றும் தாய்லாந்தின் அனுசரணையுடன், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 54/115 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதுடன், இது ஐக்கிய நாடுகள் சபையில் வெசாக் தினத்தை சர்வதேச அளவில் அங்கீகரிக்கின்றது.
உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு வெசாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இலங்கையின் தூதுவர் மொஹான் பீரிஸ் மற்றும் தாய்லாந்தின் தூதுவர் சூரிய சிந்தவோங்சே ஆகியோரின் ஆரம்ப உரையுடன் நினைவேந்தல் ஆரம்பமானது.
உயர்மட்ட அமர்வின் போது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் தலைவர் அப்துல்லா ஷஹீத் மற்றும் தாய்லாந்து இராச்சியத்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான டான் பிரமுத்வினாய் ஆகியோர் முன் பதிவு செய்யப்பட்ட அறிக்கைகள் மூலம் நினைவேந்தலில் உரையாற்றினர். உலகம் முழுவதும் நெருக்கடிகளின் பன்முக சவால்களை எதிர்கொள்ளும் போது, பௌத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பணிவும் ஆழமான பச்சாதாபமும் நமது உலகத்தின் நல்வாழ்வுக்கு ஒருங்கிணைந்த மற்றும் அவசியமானவை என்பது முன்னெப்போதையும் விட தெளிவாக உள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செய்தி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸின் எழுத்துப்பூர்வ செய்தியில் வலியுறுத்தப்பட்டது.
ஸ்டேட்டன் தீவு பௌத்த விகாரையின் பிரதமகுரு வணக்கத்துக்குரிய ஹீன்புன்னே கொண்டன்ன தேரர் தேரவாத பாரம்பரியத்தில் பிரசங்கங்களை நடாத்தி ஆசீ வேண்டினார். நியூயோர்க்கின் ஹெய்வா அமைதி மற்றும் நல்லிணக்க அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் வணக்கத்துக்குரிய நககாகி, அமெரிக்க பௌத்த கூட்டமைப்பைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய மிங் யூ, கொரிய பௌத்த வோன்காக்சாவின் வணக்கத்திற்குரிய கிக்வாங் ஆகியோர் கொரிய, ஜப்பானிய மற்றும் சீன மொழிகளில் ‘இதய சூத்ரா’ மற்றும் ‘நான்கு பெரிய உறுதிமொழிகள்’ ஆகியவற்றைப் பாடுவதன் மூலம் ஆசீ வேண்டினர்.வணக்கத்திற்குரிய அஜான் கெவாலி, தாய்லாந்தின் வட் ப நானாசட் மற்றும் நியூயோர்க் பௌத்த விகாரையின் பிரதம அதிபரும், நியூயோர்க் பௌத்த விகாரை அறக்கட்டளையின் தலைவருமான அளுத்கம தம்மஜோதி தேரர், புத்த பெருமானின் செய்தியை கோடிட்டு, பிரசங்கங்களின் மூலம் நினைவேந்தலுக்கு ஆசீர்வாதங்களைச் சேர்த்தனர். இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் தாய்லாந்தில் வெசாக் கொண்டாடப்படும் விதம் பற்றிய கலாச்சார வீடியோக்கள் திரையிடப்பட்டது.
மெய்நிகர் ரீதியாக இணைந்த நேபாளம், இந்தியா, வியட்நாம், சீனா, சிங்கப்பூர், பூட்டான், மியான்மர், எகிப்து, லாவோ ஜனநாயக மக்கள் குடியரசு, கம்போடியா, இந்தோனேசியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஜப்பான், பிலிப்பைன்ஸ், கொரியக் குடியரசு, ரஷ்யா, மலேசியா ஆகிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளில் வெசாக்கை கொண்டாடுதல் மற்றும் எமது வாழ்வில் பௌத்தத்தின் பொருத்தம் மற்றும் முக்கியத்துவம் குறித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.
நியூயோர்க்கிற்கான நிரந்தரத் தூதரகம்
நியூயோர்க்
2022 மே 16