திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நான் பொது வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது.
கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிமிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாதம் கிலோ 40 ரூபாய் வரை விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதன் காரணமாக இனி வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் இருப்பதாகவும் உடனடியாக மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்துசெய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும் , நூல் இறக்குமதிக்கான வருகை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16 மற்றும் 17 தினங்களில் திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது .
இதனை ஏற்று கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பின்னலாடை தொழில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தது. திருப்பூரில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இதன் காரணமாக நாளொன்றுக்கு 360 கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டமும் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.