திருநெல்வேலியில் நடைபெற்ற கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம், பொன்னாக்குடி அருகே கல் குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில், 300 அடி பள்ளத்தில் 6 பேர் சிக்கிக் கொண்டதில், 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்நிலையில், 3 – வதாக மீட்கப்பட்ட செல்வம் என்பவர் உயிரிழந்தும், ஏனைய மூவரின் நிலைகுறித்து அறிய முடியாமல் இருப்பது மிகுந்த மன வருத்தமளிக்கிறது.
தருவை, பொன்னாக்குடி, செங்குளம், கோபாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலஓமநல்லூர் ஆகிய இடங்களில் பத்திற்கும் மேற்பட்ட தனியார் கல்குவாரிகள் சுமார் 400 முதல் 600 அடி ஆழத்திற்கு மேல் கல்குவாரிகள் நடத்தி வருகின்றனர்.
இதனால் அடை மிதிப்பான்குளம், கண்டித்தான் குளம், பொன்னாக்குடி, தருவை, ஆலங்குளம், ஈஸ்வரியார்புரம், கீழ ஓமநல்லூர், மேலஓமநல்லூர், செங்குளம் போன்ற கிராமங்களில் உள்ள கல் குவாரிகளில் போர் குழிகள் மூலமாக பாறைகள் உடைக்கும் பணி நடைபெறுவதால், நில அதிர்வு ஏற்பட்டு வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காதது அலட்சியத்தை காட்டுகிறது.
கட்டமைப்பை சரியாக ஆய்வு செய்யாமல் 400 – 600 அடி அளவிற்கு அதிக ஆழத்தில் போர்வெல் மூலமாக துளையிடுவதற்கு அனுமதித்ததன் விளைவாக, பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டாலும், 40 மணி நேரத்திற்கு மேலாக ஏனைய மூவரை மீட்க முடியாத துயரமான சூழல் நிலவி வருகிறது.
மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குவாரிகள் உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்.
ஆனால், இனி இது போன்ற அசம்பாவிதங்கள் எப்போதும் ஏற்படாத வகையில், அதிக ஆழம் கொண்ட ஆழ்துளை போர்வெல் மூலமாக துளையிட்டு பாறைகளை வெடிக்கச் செய்யும் குவாரிகளையும், அதிக ஆழம் கொண்ட குவாரிகளின் உரிமங்களையும் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், அரசு உடனடியாக எஞ்சிய மூவரையும் பத்திரமாக விரைந்து மீட்க முயற்சிக்கவும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற உயர்தர சிகிச்சை அளித்து, நிவாரண தொகையை கூடுதலாக வழங்கிடவும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளரிடமிருந்து ரூ.25 லட்சம் நிதி உதவியை பெற்றுத்தரவும், அரசு சார்பில் கருணை அடிப்படையில் அக்குடும்பத்தின் வாழ்வாதார தேவைக்கு, அவரது வாழ்நாள் ஊதியத்தை இழப்பீடாக அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், ஆழ்துளை கிணறுகள், பள்ளங்கள், குவாரிகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்த்து, பாதிக்கப்பட்டவர்களை எளிமையாக மீட்பதற்கு உரிய தொழில்நுட்பங்களை கண்டறிய, இளைஞர்களை ஊக்குவித்து சிறப்பு நிதி ஒதுக்கி, சீரமைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.