கர்நாடக மாநிலத்தில் பட்டப்பகலில் பொது இடத்தில் பெண் வழக்கறிஞரை கண்மூடித்தனமாக வாலிபர் தாக்கிய சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த மகாந்தேஷ் என்ற நபர், நிலத் தகராறு தொடர்பாக பெண் வழக்கறிஞர் சங்கீதாவை கண்மூடித்தனமாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலின் 8 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த மகாந்தேஷ் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான பெண் வழக்கறிஞர் சங்கீதா இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். மகாந்தேஷ் அல்லது அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல், அவர்கள் வசிக்கும் வீட்டை பெண் வழக்கறிஞர் சங்கீதா விற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. வீட்டை வாங்கியவர் வீட்டைக் காலி செய்யும்படி வற்புறுத்தியதால் சங்கீதாவுக்கும் மகாந்தேஷ்-க்கும் ஏற்கெனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஏற்கெனவே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை நடுரோட்டில் வைத்து பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது கணவரை தாக்கத் துவங்கியுள்ளார். அந்தப் பெண்ணின் வயிற்றில் மகாந்தேஷ் ஓங்கி உதைத்ததால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். தொடர்ந்து மகாந்தேஷ் அந்த பெண்ணை பல முறை ஓங்கி அறைந்ததால் அந்தப் பெண் தான் வைத்திருந்த சில காகிதங்களை கீழே போட்டார். பின் அந்தப் பெண்ணை இன்னும் சில முறை மகாந்தேஷ் எட்டி உதைத்துள்ளார்.
Trigger warning: A lawyer was brutally assaulted by a man named Mahantesh in Vinayak nagar, Bagalkot, Karnataka. pic.twitter.com/kZ3OpUeKbi
— Mohammed Zubair (@zoo_bear) May 14, 2022
இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிலரால் மொபைலில் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. வீடியோ வைரலானதை அடுத்து பாகல்கோட் டவுன் போலீசார், மகாந்தேஷை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராக வேண்டாம் என பாகல்கோட்டில் உள்ள வழக்கறிஞர்கள் முடிவு செய்து, தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தேசிய மகளிர் ஆணையமும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா கடிதம் எழுதியுள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எடுக்கப்பட்ட நடவடிக்கை 7 நாட்களுக்குள் தெரிவிக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
@NCWIndia has taken cognizance of the brutal assault. Chairperson @sharmarekha has written to @DgpKarnataka to take stringent action against the accused. NCW has also sought best medical treatment for the victim. Action taken must be apprised within 7 days.
— NCW (@NCWIndia) May 15, 2022
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM