லண்டன் நாட்டைச் சேர்ந்த டோனி ஃபின் என்பவர் 24 வருடங்களாக எலெக்ட்ரிசியனாக பணியாற்றி வருகிறார். இவர் பணிபுரிந்து வந்த ‘பிரிட்டிஷ் பங் உற்பத்தி லிமிடெட்’ (British Bung Company) என்ற நிறுவனம் இவரின் தலைமுடி இல்லாத தலை குறித்து ‘வழுக்கை’ என்று கேலியாக பேசியுள்ளது. இதனால் டோனி ஃபின்க்கும் நிறுவனத்திற்கும் இடையே வாக்குவாதம் முற்றியதையடுத்து அந்நிறுவனம் டோனி ஃபின்னை கடந்த ஆண்டு மே மாதம் பணியிலிருந்து நீக்கியது. இதனால் வருத்தமடைந்த டோனி ஃபின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் தன் தலைமுடி குறித்து ‘வழுக்கை’ எனக் கேலியாக பேசுவது ஒருவகையான பாலியல் துன்புறுத்தல் என்றும் நியாமற்ற முறையில் தன்னை பணியிலிருந்து நீக்கியது தவறு என்றும் வழக்கில் குறிப்பிட்டுருந்தார்.
கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜொனதன் பிரைன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியது. “வழுக்கை பிரச்னை, பெண்களை விட ஆண்களுக்கு மிகவும் அதிகமாக உள்ளது. எனவே இது மனிதர்களின் பாலியலில் தொடர்புடையதாக நாங்கள் கருதுகிறோம். ‘வழுக்கை’ என்ற வார்த்தைக்கும் பாலினத்தின் பண்புக்கும் தொடர்பு உள்ளது. எனவே பணியிடத்தில் ஒருவரை ‘வழுக்கை’ என்று அழைப்பது அல்லது கேலி செய்வது ஒருவகையான பாலியல் துன்புறுத்தல் என்ற வரம்புக்குள்தான் வரும்” என்று கூறியுள்ளது இங்கிலாந்து தீர்ப்பாயம்.