பெங்களூரு: பற்களில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல நானோ பாட்களை (Nano Bot) பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் முயற்சியை ஆய்வின் மூலம் இந்திய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிட்டி 2.0 ரோபோ, அதன் மைக்ரோ பாட்டான சிட்டி 3.0 ரோபோவை வடிவமைத்து, பயன்படுத்தும். அது போல மருத்துவ அறிவியலில் புதிய முயற்சி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அங்கொன்றும், இங்கொன்றுமாக சிகிச்சைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில், இந்திய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
பற்களில் உள்ள பாக்டீரியாவை அழிக்கவும், வேர் சிகிச்சை மேற்கொள்ளவும் சிறிய ரக நானோ பாட்களை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை ஆய்வு ரீதியாக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இது பல் சிகிச்சை முறையில் அடுத்த கட்டம் என சொல்லப்படுகிறது. இதனை ஆய்வறிக்கையாக Advanced Healthcare Materials என்ற மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.
இரும்பு முலாம் பூசப்பட்ட சிலிகான் டை ஆக்சைடுகளை கொண்டு நானோ பாட்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். பற்களில் செலுத்தப்படும் அந்த பாட்களை, காந்த சக்தியின் துணை கொண்டு கன்ட்ரோலர் மூலம் கட்டுப்படுத்தலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை மாதிரி பற்களுக்குள் செலுத்தி, நுண்ணோக்கி (Microscope) மூலம் கவனித்து, அதனை அவர்கள் கட்டுப்படுத்தியும் உள்ளனர். மேலும், எலிகளிலும் அதை சோதித்து பார்த்துள்ளதாக தெரிகிறது.
இதனை மருத்துவ முறைக்கு கொண்டு வரும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். அடுத்த சில ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரலாம் எனவும் தெரிகிறது. அதோடு பல் சிகிச்சையின் போது நானோ பாட்களை பற்களுக்குள் சுலபமாக செலுத்தவும், அதனை கையாளவும் வாய்க்குள் பொருந்தும் வகையிலான கருவி ஒன்றை ஆரய்ச்சியாளர்கள் வடிவமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.