சென்னை: பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு ஆகியோர் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேறக தமிழகம் வர இருக்கிறார்கள். இதையொட்டி, பாதுகாப்பு உள்பட பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து, காவல்துறை மற்றும் உயர் அதிகாரி களுடன் தலைமைச்செயலர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி சிறை திறப்பு விழாவில் பங்கேற்க வரும் 28ந்தேதி துணைகுடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வர இருக்கிறார். அதுபோல, தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் மே 26ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். இதன்காரணமாக, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவன் உள்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய நெடுஞ்சாலை விழாவான வரும் 26ந்தேதி அன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், முடிவுற்ற. மதுரை – தேனி இடையேயான அகல இரயில் பாதை திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர், பெங்களூரு – சென்னை 4 வழி விரைவுச் சாலையின் 3ம் கட்ட பணிகள், சென்னையில் அமைய உள்ள மல்ட்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா, மீன்சுருட்டி – சிதம்பரம் இடையிலான புதிய சாலை உள்பட ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்,இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.