புதுடெல்லி: பிரதமர் மோடி இன்று ஒருநாள் பயணமாக நேபாளம் செல்கிறார். இதையொட்டி இந்திய – நேபாள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் பிரதமர் ஷெர் பகதுார் தியூபா அழைப்பை ஏற்று, லும்பினியில் உள்ள புத்தர் கோயிலில், இன்று நடக்கும் புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். பின், மாயாதேவி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். இதற்காக இன்று அவர் நேபாளம் செல்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள அறிக்கையில், ‘நேபாளம் உடனான நமது நட்புறவு இணையற்றது. இந்தியா- நேபாளம் இடையிலான மக்கள் தொடர்பு, நெருங்கிய நட்புறவின் நீடித்த அம்சமாக அமைகிறது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நேபாளத்துக்கு செல்கிறேன். கடந்த மாதம் நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபாவின் இந்தியப் பயணத்தின்போது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் இடம் பெற்றன. பின்னர் மீண்டும் அவரை சந்திப்பதை எதிர்நோக்கி உள்ளேன். இந்த சந்திப்பின்போது பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்,’ என்று குறிப்பிட்டுள்ளார். நேபாளத்துக்கு மோடி செல்வதை முன்னிட்டு, இந்திய- நேபாள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உபி போலீசாரும், சகஸ்திர சீமாபல் படைப் பிரிவினரும் எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, தற்போது 5வது முறையாக நேபாளத்துக்கு மோடி செல்கிறார்.