கோவை மாவட்டத்தில் திராவிட மாடல் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “திராவிடம் என்பது வெறும் கோட்பாடு மட்டும் அல்ல. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக நம் மீது அடிமைத்தனத்தைத் திணித்தவர்களிடம் இருந்து மீட்க வந்த ஆயுதம் தான் திராவிட மாடல்.
மனிதனை மனிதனாக நடத்த வேண்டும் என்ற பகுத்தறிவு தான் திராவிட மாடல். பெரியாரும், அண்ணாவும், கலைஞர் கட்டிக்காத்து இன்று தளபதி கையில் ஏந்தியிருக்கும் சுயமரியாதை சுடர்தான் திராவிட மாடல். சில பேர் குஜராத் மாடல் என்கின்றனர்.
அங்கு தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவிக்கப்பட்டு, மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியான தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை. தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம் உள்ளது.
இடையில் மூன்று நாள்கள் மின் விநியோகம் தடைபட்டது. ஒன்றிய அரசு வழங்கக்கூடிய மின்சாரத்தில் ஏற்பட்ட தடங்கல்தான் காரணம். அதை மூன்று நாள்களில் சரிசெய்து, இப்போது உபரியாக மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுத்து வருகிறோம்.
கோவையைப் பொறுத்தவரை வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தான் இலக்கு. சிலபேர், ‘நாங்கள் வருகிறோம். அந்த மாடலை கொண்டுவரப்போகிறோம்.’ என சொல்கின்றனர். நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் ஒன்றிய அரசு திருப்பித் தருவது 35 பைசா மட்டுமே. ரூ.100 வரி கட்டினால் ரூ.35 மட்டுமே நமக்கு திருப்பித் தருகின்றனர்.
பல்வேறு மாநில முதல்வர்களும், நம் முதல்வரின் செயல்பாடுகளை பார்த்து வியந்து கொண்டிருக்கின்றனர். அதனால்தான் அவர் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக இருக்கிறார்.” என்றார்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா, “அம்பேத்கரை தோற்கடித்தது ஆரிய மாடல். அம்பேத்கரின் கனவை நிறைவேற்றியது திராவிட மாடல். காமராஜர் கொண்டு வந்ததும் திராவிட மாடல்தான். தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது.
இதற்கு காரணம் முதல்வர். செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோதே சிறப்பாக செயல்பட்டார். திராவிடத்தை காப்பாற்ற, கடவுள் நம்பிக்கையுள்ள செந்தில் பாலாஜி இந்த கருத்தரங்கை நடத்துவதை பாராட்டுகிறேன்.” என்றார்.