சென்னை: காயங்களின்றி இறந்து கரை ஒதுங்கிய அரிய டால்பின் வகையான குளவி வேடன் மீனை வனத்துறையினர் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.
புதுச்சேரி வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் வளத்தான். இன்று மாலை வைத்திக்குப்பம் கடற்கரையில் கருமையான நிறத்தில் மீன் மிதந்து வருவதை பார்த்தார். அதை கடற்கரையில் இழுத்து போட்டபோது, அது டால்பின் வகையைச் சேர்ந்த 3.5 அடி கொண்ட குளவி வேடன் என்ற அரிய வகை மீன் என்பது தெரிந்தது. அந்த மீன் இறந்திருந்தது.
இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தந்தார். அவர்கள் வனத்துறையினர் மற்றும் மீன்வளத்துறைக்கு தகவல் தந்தனர். வனத்துறையின் துணை வனக்காப்பாளர் வஞ்சனவள்ளி நேரில் வந்து ஆய்வு செய்தார்.
அதையடுத்து அவர் கூறுகையில், “இறந்து கரை ஒதுங்கிய மீன் அபூர்வமான பாலூட்டி வகையைச் சேர்ந்த பெண் இனம். உடலில் காயம் இல்லை. சுமார் 25 கிலோ எடையுள்ளது. சுமார் 3 அடிக்கு மேல் உள்ளது. இறந்தது எப்படி என தெரியவில்லை. அதனால் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு ஆய்வுக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியும்” என்று குறிப்பிட்டார்.