கடந்த சில வாரங்களாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல விதமான செய்தி அறிக்கைகள் வெளியாகின. சமூக ஊடகங்கள் மூலமும் பல தகவல்கள் பகிரப்பட்டன. பெரும்பாலானவர்கள் அவர் மிகவும் கடுமையான நோய்களுக்கு உள்ளாகி வருவதாகக் கூறுகின்றனர். சமீபத்திய அறிக்கையில், புடின் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விளாடிமிர் புடின் தற்போது “மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார்” என்றும் “இரத்த புற்றுநோயால்” பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூற்றுக்கள் ரஷ்யாவில் அரசியல் ஆதிக்கம் உள்ள ஒரு தொழில் அதிபர் கூறியதாகவும், ரகசிய பதிவு மூலம் இந்த தகவல் வெளிவந்தது எனவும் கூறப்பட்டுள்ளன.
நியூஸ் லைன் இதழின் அறிக்கையில், ரஷ்யாவின் அரசுக்கு நெருக்கமான தொழில் அதிபர், மேற்கத்திய வர்த்தகர் ஒருவருடன் புடினின் உடல்நலம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த ஒரு பதிவு வெளியானது. ரஷ்ய அதிபருக்கு இருக்கும் நோய் காரணமாக மாஸ்கோ ஆழ்ந்த கவலையில் இருப்பதாகவும் தொழில் அதிபர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்
நியூஸ் லைன் இதழுக்கு கிடைத்த ஒலிப்பதிவில், “இந்த நோயின் காரணமாக புடின் இறந்துவிடுவார் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். அவர் உண்மையில் ரஷ்யாவின் பொருளாதாரம், உக்ரைனின் பொருளாதாரம் இரண்டையும் அழித்துள்ளார். பல நாடுகளை அழித்தார். பிரச்சனை அவனுடைய மூளையில் தான் உள்ளது. மூளை மனம் பாதிக்கப்பட்ட நபர் உலகத்தை தலைகீழாக மாற்றி விடுவார்” என அரசியல் ஆதிக்கம் உள்ள தொழில் அதிபர் ஒருவர் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுளது.
அரசியல் செல்வாக்கு மிகுந்த தொழில் அதிபர் ஒருவரின் 11 நிமிட பதிவில், புடின் “தீவிரமாக நோய்வாய்ப்பட்டுள்ளார்” என்றும் “இரத்த புற்றுநோய்க்கு” சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியதைக் கேட்டது.
மேலும் படிக்க | ஆட்சி அதிகாரத்தை உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைக்கும் புடின்… வெளியான அதிர்ச்சித் தகவல்
கடந்த சில நாட்களாக விளாடிமிர் புடின் உடல் நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்று வருவதாக பல ஊகங்கள் வெளியாகி வருகின்றன. முன்னாள் உளவாளி ஒருவரும் அதிபர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறினார். வயிற்றுப் புற்று நோய்க்கு அவர் விரைவில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
புடின் தனது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, முன்னாள் KGB உளவாளியிடம் ரஷ்யாவிடம் அதிகாரம் ஆட்சியை ஒப்படைப்பதாக வதந்தி பரவியது. ஆனால் அத்தகைய அறிக்கை எதுவும் ரஷ்ய அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. வெற்றி நாள் கொண்டாட்டங்களின் போது வெளியான சில புகைப்படங்களும் விளாடிமிர் புடின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாரோ என தோன்றும் வகையில் உள்ளது. புகைப்படங்களில் அவர் போர்வையுடன் அமர்ந்திருப்பதைப் காணலாம்.
தற்போதைய போருக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இந்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பல உலகத் தலைவர்களுடன் சேர்ந்து, புடினின் போர் நடவடிக்கைகள் தொடர்பாக அவரைக் கடுமையாக சாடியதோடு, போர்க்குற்றங்களுக்காக அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி… ஜெர்மனியை மிரட்டும் ரஷ்யா